டில்லி

டிஜிடல் பணப் பரிவர்த்தனை செயலியான ‘வாட்ஸ்அப் பே’ செயலிக்குத் தேசிய பரிவர்த்தனை ஆணையம் உரிமம் அளித்துள்ளது.

இந்தியாவில் தற்போது டிஜிடல் பணப் பரிவர்த்தனை மிக அதிக அளவில் நடைபெற்று வருகிறது.   அவ்வகையில் பேடி எம்,  கூகுள் பே, போன்பே போன்ற செயலிகள் மிகவும் பிரபலமாக உள்ளன.  சென்ற வருடம் இந்த வரிசையில்  வாட்ஸ்அப் வலைத் தளத்தின் வாட்ஸ்அப் பே செயலி  குறித்த அறிவிப்பு வெளியானது.   மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள வாட்ஸ்அப் செயலியின் வாடிக்கையாளர்கள் இதைப் பெருமளவில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த செயலிக்கு இந்தியாவின் தேசிய பணப் பரிவர்த்தனை ஆணையம் உரிமம் அளித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.    வாட்ஸ்அப் மூலம் விவரங்கள் திருடப்படுவதாக எழுந்த புகாரையொட்டி இந்த செயலிக்குத் தாமதமாக உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரீவ்த்துள்ளார்.   இந்த உரிமம் ரிசர்வ் வங்கியின் ஆய்வு மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

முதல் கட்டமாக வாட்ஸ்அப் பே  சுமார் 1 கோடி பேருக்கு இந்த சேவையை வழங்க உள்ளது.  பல அம்சங்கள் இதில் அமைக்க வேண்டி இருந்தாலும் தகவல் பிரிவு தங்கு தடையின்றி முழுமையாகச் செயல்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.   இந்த செயலி முழுமையாகச் செயல்படத்  தொடங்கியதும் 4 கோடி வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்யப்படும் எனச் சொல்லப்படுகிறது.