கோஹிமா: நாகலாந்து மாநிலத்தின் பெரிய கட்சியான நாகா மக்கள் முன்னணி(Naga People’s Front), இத்தேர்தலில் முதன்முறையாக காங்கிரசை ஆதரிக்கிறது.

நாகலாந்து மாநிலத்தில், இந்த மக்களவைத் தேர்தலில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு உருவான நாகா மக்கள் முன்னணி, செல்வாக்குப் பெற்ற கட்சியாகத் திகழ்கிறது.

கடந்த 15 ஆண்டுகளில், இத்தேர்தலில்தான், அக்கட்சி தன் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தவில்லை மற்றும் பாரதீய ஜனதாவையும் ஆதரிக்கவில்லை. அதற்கு பதிலாக, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பழம்பெரும் தலைவர் கே.எல்.சிஷியை ஆதரிக்கிறது நாகா மக்கள் முன்னணி.

அதேசமயம், சொந்தக் கட்சித் தொடங்கியுள்ள மாநில முதல்வர் நெய்ஃபூ ரியோ, பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த முறைதான் லோக்சபா தேர்தலில், அம்மாநிலத்தில் இவ்வளவு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

வாஜ்பாய் காலத்திலிருந்த பாரதீய ஜனதா பாதை மாறி, தற்போது வகுப்புவாத கட்சியாக மாறிவிட்டதென்று நாகா மக்கள் முன்னணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி