பிரேந்தர் சங்க்வான் ஒரு வழக்கறிஞரின் சட்டப்போராட்டத்தின் விளைவாய், இதய ஸ்டென்ட் விலை சமீபத்தில் 400% குறைக்கப்பட்டது. இது குறித்து பத்திரிக்கை.காமில் நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இதனையடுத்து, தற்போது விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் மேலும் 14 மருத்துவ சாதனங்கள் விலை கட்டுப்படுத்தப் படும் எனத் தேசிய மருந்தக விலை ஆணையம் (NPPA) அறிவித்துள்ளது.
இதய மருந்து செலுத்தும் கம்பி ( ஸ்டென்ட்) விலைக்குறைப்பினை அடுத்து எலும்பியல் உள்வைப்பு உலோகங்கள், உள்விழி லென்ஸ்கள், செயற்கை இதய வால்வு முதல் ஊசிகள் மற்றும் வடிகுழாய்கள் வரையிலான நுகர்பொருட்களின் விலையும் ஒரு மாத்த்திற்குள் குறையும் என என்.பி.பி.ஏ. தெரிவித்துள்ளது.

மேற்கண்ட மருத்துவ நுகர் பொருள் தயாரிப்பாளர்களிடம், உற்பத்தி செலவுகுறித்த எல்லா விவரங்களையும் துல்லியமாகச் சமர்ப்பிக்கும்படி அறிவுருத்தியுள்ளது.
தேசிய மருந்தக விலை ஆணையம் (NPPA) தலைவர் பூபேந்திர சிங், அவுட் லுக் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் போர்க்கால அடிப்படையில், துரிதமாக இந்தச் சாதனங்களின் தயாரிப்புகுறித்த தரவுகளைச் சேகரித்து வருகின்றோம். உற்பத்தி செலவு, நுகர்வு அளவு, ஒரு நோயாளிக்கு என்ன விலையில் வழங்கப்படுகிறது வரை அனைத்து தகவல்களையும் ஆராய்ந்து, விலைக்கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப் படும். மக்கள் சுகாதாரம் மற்றும் சிகிச்சை துறையில் உள்ள பொருட்கள் கொள்ளைவிலைக்கு விற்கப்படுவதை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்துவோம். “ என்றார்.

தாறுமாறாக விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எலும்பியல் உள்வைப்புகளின் விலை கிட்டத்தட்ட இதய ஸ்டென்ட்களின் விலையுடன் ஒத்துப்போகின்றன. மாற்று சிகிச்சைகளுக்கு, இறக்குமதி செய்யப்படும் இடுப்பு மற்றும் முழங்கால் பகுதிகள் அநியாயமாய் 500-1,000 சதவிகிதம் வரை விலையுயர்த்தி விற்கப்பட்டு கொள்ளை லாபம் அடிக்கப் படுகின்றது.
அதாவது, ஆயிரம் ரூபாய்க்கு விற்க வேண்டிய செயற்கை உறுப்புகள், பத்து லட்சத் திற்கு விற்கப்படுகின்றன.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகளுக்கான பொருட்கள் கூட 200-500% வரை அதிகமாக விற்கப்படுகின்றன. அதிக லாபம் அடைவதற்காக, அறுவை சிகிச்சை நிபுணர்கள், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களையே விரும்புகின்றனர்.

மருத்துவமனை மற்றும் கண் அறுவை சிகிச்சை நிபுணரைப் பொறுத்து உள்விழி லென்ஸ்கள் விலையும் பரவலாக மாறுபடுகின்றது.
மறுபுறம், மருத்துவ நுகர்பொருட்களின் விலையும் அதிகப்பட்ச விலை (MRP)யை விட அதிகமாக விற்கப்படுவதுடன், நோயாளியின் தலையில் கட்டப்படுகின்றது.
தற்போது, மருந்துகள் மற்றும் அழகுசாதன சட்டம் பிரிவு மூன்றின் கீழ், 14 சாதனங்கள் தான் “மருந்துகள்” எனப் பட்டியலிடப் பட்டுள்ளன. ஆனால், எதுவும், “அத்தியாவசிய மருந்துகள்” பட்டியலில் வகைப்படுத்தப்படவில்லை.

எனவே இதய ஸ்டென்ட் விலையைக் கட்டுப்படுத்த முதலில் அதனை “அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலில் சேர்க்க வேண்டியிருந்தது.
இவ்வாறு பட்டியலிடப்படாத மருந்துகளின் விலையை ஆண்டுதோறும் 10% மிகாமல் அதிகரிக்க NPPA உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.