புதுச்சேரி: புதுச்சேரியில் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி,  என்.ஆர்.காங்கிரஸ் -அதிமுக – பாஜக இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தமிழகத்தைப்போன்றே புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கும் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. திமுக காங்கிரஸ் இடையே உடன்பாடு குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  இதற்கிடையில், பாஜக உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, என்.ஆர். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக, மத்திய  உள்துறைஅமைச்சர்  அமித்ஷா மூலம் ரங்கசாமியிடன் பேச்சுவார்த்தை நடத்தியது.  இதைத்தொடர்ந்து, அங்கு கூட்டணி உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகளை விட்டுக் கொடுப்பதாகவும், முதல்வர் வேட்பாளர் ரங்கசாமி என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.  மீதமுள்ள 13 தொகுதியை பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் பிரித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி, தொகுதி உடன்பாடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.