குவஹாத்தி: என்ஆர்சி எனப்படும் நேஷனல் ரெஜிஸ்டர் ஆஃப் சிட்டிசன்ஸ் அதாரிட்டி, அஸ்ஸாம் மாநில குடிமக்கள் தொடர்பான தனது இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில் மொத்தம் 19.07 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். இது மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியது. எனவே, மீண்டும் சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டு, அடுத்த 15 நாட்களுக்குள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தின் 3.3 கோடி மக்களின் விபரங்கள் இதில் அடங்கியுள்ளன. இந்த செயல்திட்டம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம். அதிகாரப்பூர்வ என்ஆர்சி வலைதளத்தில் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

யாரெல்லாம் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்? யாரெல்லாம் நிராகரிக்கப்பட்டுள்ளார்கள்? யாருடைய விண்ணப்பித்தல்கள் நிலுவையில் இருக்கின்றன? உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அதில் இடம்பெற்றுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

ஒருவர், தனது விண்ணப்ப நிலை குறித்து அறிந்து கொள்வதற்கான விண்ணப்ப ரசீது எண்ணைப் பயன்படுத்தி விபரங்களை அறிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலுக்கும், தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலுக்கும் இடையிலான வித்தியாசம் குறித்து என்ஆர்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடீக் ஹஜேலா விளக்கினார்.