ஹரியானாவிலும் என்ஆர்சி அமல் செய்யப்படும்: முதல்வர் மனோகர் லால் கட்டார்

சண்டிகர்: தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என்ஆர்சி நடைமுறையானது, ஹரியானா மாநிலத்திலும் அமல்படுத்தப்படும் என்று அம்மாநிலத்தின் பா.ஜ. முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்தக் கருத்து பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா முதல்வர் கட்டாரின் கருத்தை ஆதரித்துள்ளார்.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி, பாரதீய ஜனதா கட்சியின் திட்டமான மஹா சம்பர்க் அபியான்’ என்ற திட்டத்தின் கீழ், பிரபலங்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, முதல்வர் கட்டார், ஓய்வுபெற்ற நீதிபதி எச்.எஸ்.பல்லா மற்றும் முன்னாள் கடற்படை தளபதி சுனில் லன்பா ஆகியோரை சந்தித்தார்.

அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், அஸ்ஸாம் மாநிலத்தை அடுத்து, என்ஆர்சி நடைமுறை ஹரியானாவிலும் அமல்படுத்தப்படும் என்றார்.

மேலும், நாட்டை ஒவ்வொரு விஷயத்திலும் எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது குறித்து அப்பிரபலங்களிடம் விவாதித்ததாகவும் தெரிவித்தார்.

கட்டாரின் இந்தக் கருத்தை முன்னாள் காங்கிரஸ் முதல்வரான ஹூடா ஆதரித்துள்ளதுதான் பரபரப்பை கிளப்பியுள்ளது. “முதல்வரின் கருத்து என்பது சட்டத்தின் அடிப்படையிலானது. வெளிநாட்டவர் வெளியேறித்தான் ஆக வேண்டும். எனவே, அவர்களை கண்டறிவது அரசின் கடமையாகும்” என்றார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-