என்ஆர்சி உத்திரப்பிரதேசம் வந்தால் யோகி ஆதித்யநாத் வெளியேற நேரிடும்: அகிலேஷ் யாதவ்

லக்னோ: பா.ஜ. அரசின் என்ஆர்சி உத்திரப்பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டால், முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ்.

நாடு முழுவதும் என்ஆர்சி -ஐ நடைமுறைப்படுத்துவது குறித்து அகிலேஷ் யாதவிடம் கருத்து கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

அவர் கூறியதாவது, “என்ஆர்சி உத்திரப்பிரதேசத்தில் அமல்செய்யப்பட்டால் தற்போது முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். ஏனெனில் அவர் உத்ரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

பாரதீய ஜனதா முன்பு பிளவுபடுத்தும் அரசியலை செய்தது. தற்போது பயமுறுத்தும் அரசியலை மேற்கொள்கிறது. இந்த அரசியலை நாங்கள் மக்களுக்கு புரியவைப்போம். அத்தகைய அரசியல்வாதிகள் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

ஜம்மு காஷ்மீரில் என்ன நடக்கிறது? நோயுற்றவர்களுக்கு மருத்துவம் கிடைக்கிறதா? குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்களா? அ‍‍ங்கே அனைத்தும் சுமூகமாக நடக்கிறதென்றால் எதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் நீடிக்க வேண்டும்?” என்றுள்ளார் அகிலேஷ்.