பீகாரில் தேசிய குடிமக்கள் பட்டியல் அமலாகாது : நிதிஷ்குமார் உறுதி

ர்பங்கா

பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பட்டியல் அமல் படுத்தப் போவதில்லை என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் உறுதி அளித்துள்ளார்.

நாடெங்கும் குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பட்டியல் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.    அசாம் மாநிலத்தில் அமலாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பட்டியலில் சுமார் 19 லட்சம் பெயர்கள் விடுபட்டதால் மக்கள் மனதில் அச்சம் நிலவுகிறது.

எனவே மத்திய பாஜக அரசு இது குறித்துப் பல சமாதானங்கள் சொல்லியும் எதிர்க்கட்சிகள் அவற்றை ஏற்காமல் உள்ளன.   இந்நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பதும் குடிமக்கள் பட்டியலில் ஒரு அங்கம் என அச்சம் உள்ளதால் அதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருகிறது.

பீகார் மாநிலம் தர்பங்காவில் ஒரு நிகழ்வில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கலந்துக் கொண்டார்.  அவர் தனது உரையில், “பீகாரில் தேசிய குடிமக்கள் பட்டியலை அமலாக்கப் போவதில்லை.  தேசிய மக்கள் தொகை பதிவேடு கடந்த 2010 ஆம் வருடம் நடந்த அதே அடிப்படையில் மட்டுமே நடத்தப்படும்” என உறுதி அளித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் ஏற்கனவே தேசிய குடிமக்கள் பட்டியல் அமலாகாது என உறுதி அளித்துள்ளனர்.   இந்நிலையில் பாஜகவின் கூட்டணி அரசின் முதல்வர் இவ்வாறு உறுதி அளித்திருப்பது அரசியல் உலகில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.