நூறு நாள் வேலை திட்டத்தை செயல்படுத்துவதில் கடைசி இடத்தில் மகாராஷ்டிர பாஜக அரசு

மும்பை:
நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமப் புறங்களில் செயல்படுத்துவதில், பாஜக தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசு நாட்டிலேயே கடைசி இடத்தில் உள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும்பாலான கிராமங்கள் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்காக தயாராக உள்ள பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதின் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகள் புது உத்வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய நடவடிக்கை விவசாயிகளின் துயரத்தைப் போக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் நாட்டிலேயே கடைசி இடத்தில் மகாராஷட்டிர மாநிலம் உள்ளது.

2018-19-ல் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் நாடு முழுவதும் 4.54 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன. இத்திட்டதால் பயனடைந்தோர் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்தில் 50 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
உத்திரப்பிரதேசத்தில் 43 லட்சம் குடும்பங்களும், ஆந்திராவில் 40 லட்சம் குடும்பங்களும் மேற்கு வங்கத்தில் 41 லட்சம் குடும்பங்களும் பயன்பெற்றுள்ளனர்.

ஆனால் மகாராஷ்டிராவில் 15 லட்சம் குடும்பங்கள் மட்டுமே நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர்.
சிறு மாநிலங்களான ஒடிசா மற்றும் சத்தீஸ்கரை விட மகாராஷ்டிராவில் குறைந்த அளவே பயன்பெற்றுள்ளனர்.  கிராமப்புற வேலை வாய்ப்பை பெருக்குவதிலும் நாட்டிலேயே மகாராஷ்ட்ரா கடைசி இடத்தில் உள்ளது.

ஒரே ஒரு மகிழ்ச்சி என்னவென்றால், நூறு நாள் வேலை திட்ட சம்பளத்தை தாமதிக்காமல் கொடுப்பதில் மட்டுமே மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.