புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர், பிரதமர் மோடியின் நெருங்கிய உதவியாளர்களுள் ஒருவராகவும், கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து, மோடிக்கு மிக நெருங்கிய குழுவினரில் ஒருவராக இருந்தார்.

முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தாலும், மோடியின் வேண்டுகோளுக்கிணங்க மேலும் 2 வாரங்களுக்கு அவர் பதவியில் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாட்டின் மிகச்சிறந்த அதிகாரிகளில் நிருபேந்திர மிஸ்ரா மிகவும் முக்கியமானவர். பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகத்தில் அவர் சிறந்த திறன் கொண்டவர். கடந்த 2014ம் ஆண்டு நான் டெல்லிக்கு புதிய நபராக இருந்தபோது, அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தார் மற்றும் அவரின் வழிகாட்டுதல்கள் மிகவும் மதிப்பு வாய்ந்ததாக நீடிக்கிறது” என்று தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் மோடி.

“அவர் தனது தனிப்பட்ட திறனின் அடிப்படையில் மட்டும் எனக்கு உதவி செய்யவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் முக்கியமான உதவியாளராக இருந்தார்” என்றும் கூறியுள்ளார் மோடி.