பழைய நோட்டுக்களை மாற்ற முடியாமல் திணறும் அரபு நாட்டுவாழ் இந்தியர்கள்

ரிசர்வ் வங்கியிடமிருந்து சரியான வழிகாட்டுதல் இல்லாததால் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் திணறிவருகின்றனர்.

arab_nri

500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டவுடன் தங்களுடமிருந்த பழைய பணத்தை மாற்ற வங்கிகளை நோக்கி படையெடுத்த அரபுநாட்டுவாழ் இந்தியர்கள் வங்கிகள் அப்பணத்தை வாங்க மறுத்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் அரசு எடுத்த நடவடிக்கை நல்லதுதான். ஆனால் வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் பணத்தை மாற்றுவதற்கான வழிவகைகளையும் அரசு செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் நாட்டுக்கு வெளியே ரூபாய் 25,000 வரை எடுத்து செல்ல அனுமதியுண்டு. அவர்கள் இந்தியா திரும்பும்போது ஏர்போர்ட் மற்றும் டாக்ஸி செலவுகளுக்காக அவர்கள் அதை வைத்திருப்பார்கள்.

இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் இந்திய வங்கிகள்தான் என்றாலும் அவை அந்தந்த நாடுகளில் உள்ள சென்ட்ரல் வங்கிகளின் கீழ் இயங்கிவருவதால் ரிசர்வ் வங்கியே சொன்னாலும் அந்தந்த நாடுகளின் சென்ட்ரல் வங்கிகளின் அனுமதியின்றி அங்குள்ள இந்திய வங்கிகளால் பணத்தை மாற்றித்தர இயலாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.