புதுடெல்லி: தேசிய பாதுகாப்புச் சட்டம்(என்எஸ்ஏ) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்(யுஏபிஏ) ஆகியவற்றை, பேச்சுரிமையை நசுக்குவதற்கான இரும்புக் கரங்களாக பயன்படுத்திக் கொள்கிறது மத்திய அரசு என்றுள்ளார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் மதன் பி லோகுர்.

‘பேச்சு சுதந்திரம் மற்றும் நீதித்துறை’ என்ற தலைப்பில் நிகழ்ந்த ஒரு ஆன்லைன் உரையாடலில் கலந்துகொண்ட அவர் கூறியுள்ளதாவது, “பேச்சுரிமையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது. நிறைய பேர்களின் மீது தேசத்துரோக வழக்கு பாய்ச்சப்படுகிறது.

பொதுமக்கள் ஏதேனும் கருத்துச் சொன்னால், அவர்களின் மீது தேசதுரோக வழக்கு பாய்ச்சப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை மட்டும் 70 தேசதுரோக வழக்குகள் பதிவாகியுள்ளன.

மேலும், பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள் என்ற பெயரிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பேச்சுரிமை நசுக்கப்படுகிறது. கொரோனா நிலைமை தொடர்பான உண்மை நிலவரங்களை(வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளிட்டவை) எழுதிய பத்திரிகையாளர்கள் சிலர் மீது, பொய் தகவல் என்ற பெயரில் வழக்குப் பாய்ந்ததை நாம் பார்க்க வேண்டும்.

மேலும், ஒருவரின் கருத்துக்கு தவறாக அர்த்தம் கற்பிக்கப்படுவதும் நடக்கிறது. டாக்டர்.கஃபீல் கான் மற்றும் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் விஷயத்திலும் இதுதான் நடந்தது” என்றுள்ளார் முன்னாள் நீதியரசர் லோகுர்.