என்.எஸ்.ஜி.: இந்தியாவுக்கு தொடர்ந்து தடை போடும் சீனா

பெய்ஜிங்:

ணுபொருள் சப்ளை குழு எனப்படும் என்.எஸ்.ஜி.,யில் இந்தியாவை சேர்க்கக்கூடாது என்ற தங்களின் நிலைப்பாட்டில்  மாற்றம் ஏதும் இல்லை என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

என்எஸ்ஜியில் இந்தியா இடம்பெற முயற்சி செய்து வருகிறது. ஆனால், அணு பரவல்தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை எனக்கூறி சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், என்.எஸ்.ஜி. குழுவின் கூட்டம் சுவிட்சர்லாந்தின் தலைநகர் பெர்னில் நடைபெற இருக்கிறது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாவது:

“அணுபரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளை என்எஸ்ஜி.,யில் சேர்க்கக்கூடாது என்ற எங்களது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது. தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்த கூட்டத்திலும், இந்த விவகாரத்தை எப்படி கையாள வேண்டும் என ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் மற்றும் ஆலோசனை படி நாம் செயல்பட வேண்டும்.  புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் விவகாரத்தில், சுவிட்சர்லாந்தில் நடக்கும் கூட்டத்தில் தென் கொரியாவில் எடுக்கப்பட்ட முடிவை பின்பற்ற வேண்டும். அணுபரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளை சேர்ப்பது குறித்து தொழில்நுட்பம், விதிமுறைகள், சட்டம் குறித்து ஒருமித்த முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.