ஜெ.வின் என்எஸ்ஜி பாதுகாப்பு விலக்கப்பட்ட விவகாரம்: மத்தியஅரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்?

சென்னை:

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வந்த என்எஸ்ஜி எனப்படும் மத்திய அரசின் அதிரடிப்படை பாதுகாப்பு விலக்கப்பட்டது குறித்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுத இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெ.மரணத்தில் உள்ள சர்ச்சை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையம் ஜெ.., சசி உறவினர், அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட  சுமார் 100 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வெளியாகி வருகிறது.

என்எஸ்ஜி பாதுகாப்புடன் செல்லும் ஜெயலலிதா (பைல் படம்)

இந்த நிலையில், ஜெ. சிகிச்சை பெற்றபோது, அவருக்கு வழங்கப்பட்ட மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு விலக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஜெயலலிதா வுக்கு, வழங்கப்பட்டு வந்த என்எஸ்ஜி  பாதுகாப்பை விலக்க கூறியது யார் என்று விசாரணை ஆணையம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுத உள்ளதாக தவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் 75 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ந்தேதி அவர் காலமானார்.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமை யில் ஒரு நபர் விசாரணை கமிஷன் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவருடன் பாதுகாப்பு வீரர்கள் யாரும் உடன் செல்லவில்லை. அதுபோல் என்எஸ்ஜி பாதுகாப்பு படை வீரர்களும் ஆம்புலன்ஸ் பின்னால் செல்லவில்லை. ஆறுமுகசாமி விசாரணை மேலும் ஜெயலலிதா செப்டம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் என்எஸ்ஜி வீரர்கள் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக, ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் சார்பில் தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவ், ஜெயலலிதா ஆலோசக ராக இருந்த ஷீலாபால கிருஷ்ணன், தனிப்பிரிவு செயலாளராக இருந்த ஷீலா பிரியாவிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.

அப்போது, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது என்எஸ்ஜி பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா, அவர்கள் மருத்துவமனைக்கு வராதது ஏன், என்எஸ்ஜி பாதுகாப்பை ஜெயலலிதாவிற்கு விலக்க சொன்னது யார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவர்களிடம் நீதிபதி எழுப்பினார்.

ஆனால் அவர்களோ தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்துள்ள நிலையில்,, என்எஸ்ஜி பாதுகாப்பை விலக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதைதை தொடர்ந்து உளவுத்துறை ஐஜி சத்திய மூர்த்தியிடம் நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை நடத்தினார். அவர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் எந்த தகவலும் தனக்கு தெரிவிக்கவில்லை என்றும், தனக்கு அன்று இரவு  இரவு 11.30 மணிக்கு தான் தகவல் கிடைத்தது, அதன்பிறகே தான்  மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறியிருந்தார்.

மேலும், என்எஸ்ஜி பாதுகாப்பு படை வீரர்கள் விலக்க வேண்டும் என்றால் தமிழக அரசு தான் மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஜெ.வுக்கு வழங்கப்பட்டு வந்த என்எஸ்ஜி பாதுகாப்பை விலக்க சொன்னது யார்? எதற்காக விலக்கப்பட்டது?  என்எஸ்ஜி பாதுகாப்பு படை வீரர்கள் ஏன் மருத்துவமனைக்கு வரவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்திடம்  விளக்கம் கேட்க ஆணையம் முடிவு செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ.மருத்துவமனையில் இருந்து, தமிழக அரசின் பொறுப்பு முதல்வராக ஓபிஎஸ் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.