என் டி ராமராவ் மகன் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்

ன்னாரப்பட்டி, தெலுங்கானா

முன்னாள் ஆந்திர முதல்வர் என் டி ராமராவின் மகன் ஹரிகிருஷ்ணா ஒரு கார் விபத்தில் இன்று காலை மரணம் அடைந்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என் டி ராமராவின் மகன் ஹரி கிருஷ்ணா.   இவரும் ஒரு தெலுங்கு நடிகர் ஆவார்.  இவருடைய தம்பி பாலகிருஷ்ணா மற்றும் இவருடைய மகன் ஜுனியர் என் டி ஆர் ஆகியோரும் நடிகர்கள்.   இவர் தெலுங்கு தேசம் கட்சியில் முக்கிய தலைவர் ஆவார்.

இவர் ஒரு திருமணத்தில் கலந்துக் கொள்ள ஐதராபாத் நகரில் இருந்து நெல்லூருக்கு காரில் இன்று விடியற்காலை 4.30 மணிக்கு கிளம்பி உள்ளார்.   இவர் சென்ற கார் அன்னாரப்பட்டி என்னும் இடத்தில் வந்துக் கொண்டிருந்தது.  அப்போது இவருடைய கார் ஓட்டுனர் தனக்கு முன்னால் சென்ற காரை முந்த முயன்றுள்ளார்.

அந்த சமயத்தில்  ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி உள்ளது. அதே நேரத்தில் எதிரே வந்த வாகனம் இந்தக் காரில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.   இதில் படுகாயம் அடைந்த ஹரி கிருஷ்ணா  உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.   அங்கு ஹரிகிருஷ்ணா மரனம் அடைந்துள்ளார்.

ஹரிகிருஷ்ணாவின் மகன் ஜூனியர் என் டி ஆர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனைக்கு தற்போது விரைந்துள்ளனர்.  தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களும் மருத்துவமனையின் முன்பு சோகத்துடன் கூடி உள்ளனர்.

ஹரிகிருஷ்ணாவின் மூன்றாம் மகன் ஜானகி ராம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு சலை விபத்தில் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது