இஸ்லாமாபாத்,

தெற்கு ஆசியாவில் அணு ஆயுத போர் நடப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் நசீர் கான் கூறி  உள்ளார்.

மேலும், சீனா பலம்பெறுவதை தடுக்கவே, சீனா பாகிஸ்தான் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியாவுடன் சேர்ந்து அமெரிக்கா சதி செய்கிறது என்றும் கூறி உள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் நசீர் கான் ஜன்ஜூவா கூறியதாவது,

தெற்கு ஆசியாவின் ஸ்திரத்தன்மை தற்போது ஊஞ்சலாடி கொண்டுள்ளது. இதன் காரணமாக வருங்காலத்தில் அணு ஆயுதப்போர் நடக்க வாய்ப்பு உள்ளது. அதை மறுக்க முடியாது.

இந்தியாவும்  பயங்கரமான ஆயுதங்கள் பலவற்றை  மறைத்து வைத்துள்ளது. அதன் காரண மாகவே தொடர்ந்து பாகிஸ்தானை மிரட்டி வருகிறது  இதன் காரணமாக  தெற்கு ஆசியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும்,  காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் கொள்கையை அமெரிக்கா பின்பற்றி வருவதாக வும், இந்தியாவின் குரலையே அமெரிக்க பிரதிபலித்து வருவதாகவும் கூறிய அவர்,    பயங்கரவாதிகளை  பாகிஸ்தான் ஆதரிப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

உண்மையில், அமெரிக்காவிற்கு எப்போது  பாகிஸ்தான் ஆதரவு அளிக்க முடிவு செய்ததோ, அதன் பின்னர்தான் பாகிஸ்தானிலும் பயங்கரவாதம் தலைதூக்க தொடங்கி உள்ளது. இதற்காக நாங்கள் அதிக விலை கொடுத்துள்ளோம் என்று கூறினார்.

ஆசியாவில் ரஷ்யா மற்றும் சீனா எழுச்சி பெற்று வருவதை விரும்பாக அமெரிக்கா, சீனா பலம் பெறுவதை தடுக்கவே,  சீனா பாகிஸ்தான் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியாவுடன் சேர்ந்து அமெரிக்கா சதி செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.