புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்க‍ை அதிகரித்து வருவதாக தேசிய சுகாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டில் நோய் பாதிப்பு 324% அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொதுவான புற்றுநோய்களாக கருதப்படும் வாய், மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்கள் கடந்த 2017ம் ஆண்டைவிட 2018ம் ஆண்டில் மேலே சொன்ன வகையில் அதிகரித்துள்ளதாம்.

அதேபோன்று பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கடந்த ஓராண்டில் சற்றேறக்குறைய 2 மடங்கு அதிகரித்துள்ளதாம்.

மன அழுத்தம், உணவுப் பழக்கம், புகையிலை மற்றும் ஆல்கஹால் தொடர்பான போதைப் பொருட்களே புற்றுநோய்க்கான பிரதானக் காரணங்களாக கூறப்படுகின்றன.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக குஜராத்தில்தான் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளதாம். அ‍‍ங்கே 72169 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கடுத்த இடங்களில் கர்நாடகா, மராட்டியம், தெலுங்கானா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.