சினிமாவில் மட்டுமல்ல- தேர்தலிலும் பெண்கள் ஆதரவு தூக்கலாக இருந்தால் ‘சொல்லி அடிக்கலாம்’ என்பது வரலாறு கற்றுக்கொடுத்துள்ள பாடம்.

இதை உணர்ந்துள்ள ஒடிசா முதல்வர்  நவீன் பட்நாயக் – தனது கட்சியில் 33% இடங்களை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளார்.

மே.வங்க முதல்வர் , மம்தா பானர்ஜி –நவீனை மிஞ்சி விட்டார். மம்தா –தனது கட்சியில்  40 % தொகுதிகள் ‘மகளிருக்கு மட்டும்’’ என்று ஒதுக்கியுள்ளார்.

தமிழ்நாட்டு நிலவரம் எப்படி?

இங்கே கோட்டா எதுவும் கிடையாது.அரசியல் தலைவர்கள், அவர்களின் வாரிசுகள் என்று இனம் பிரித்து பெண்களுக்கு டிக்கெட் வழங்கப்படுகிறது.

ஐம்பதுகளுடன் ஒப்பிடும் போது- இப்போது ஓரளவு பெண்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படு கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

1957 ஆம் ஆண்டு நடந்த மக்களைவை தேர்தலில் 142 ஆண்கள் போட்டியிட்டார்கள்.அப்போது தேர்தலில் நிறுத்தப்பட்ட பெண்கள் எத்தனை பேர் தெரியுமா?

வெறும் ரெண்டே ரெண்டு பேர்.

எனினும் பின்னாட்களில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தே வந்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மொத்தமாக 55 பெண்கள் நிறுத்தப்பட்டனர். இதுவரை நடந்த தேர்தல்களில் அதிக பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டது கடந்த தேர்தலில் தான் என்பது  மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

ஆயினும் அவர்களில் நான்கு பேர் மட்டுமே ஜெயித்து எம்.பி.யானார்கள் என்பது கசப்பான உண்மை.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் போட்டியிட பெண்களுக்கு 33% இடங்கள் ஒதுக்க வேண்டும் என்கிற மசோதா-நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அது மட்டும் நிறைவேற்றப்பட்டால்- தமிழ்நாட்டில் இருந்து குறைந்த பட்சம் 13 எம்.பி.க்கள் மக்களவைக்குள் பிரவேசம் செய்யலாம்.

நல்ல காலம் பிறக்குமா?

காத்திருப்போம்.

–பாப்பாங்குளம் பாரதி