இந்திய மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது! லடாக் துணை நிலை கவர்னர் பதவி ஏற்பு

லடாக்:

ம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின்படி படி லடாக் தனி யூனியன் பிரதேசமானது. அதன் துணை நிலை கவர்னராக ராதாகிருஷ்ணன் மாத்தூர் பதவியேற்று கொண்டார்.இதன் காரணமாக நாட்டின் யூனியன் பிரதேசங்கள் 7ல் இருந்து 9 ஆக உயர்ந்து உள்ளது.

அதே வேளையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 29ஆக இருந்து வந்தது. இதில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது மாநிலங்களின் எண்ணிக்கை 28ஆக குறைந்து விட்டது.  இந்திய கூட்டாட்சியில் பின்னடைவு என்று கருதப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் நள்ளிரவு முதல் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு விட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் துணை நிலை ஆளுநர்கள் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 9ம் தேதியிட்ட காஷ்மீர் மறுசீரமைப்புக்கான மத்திய அரசின் உத்தரவுக்கு குடியரசுத் தலைவரிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, குஜராத்தை சேர்ந்த முன்னாள் அரசு அதிகாரியான ஜி.சி.முர்மு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதுபோல லடாக்கின் துணை நிலை ஆளுநராக ராதா கிருஷ்ணன் மாத்தூர் நியமனம் செய்யப்பட்டிருந்தார். மாத்தூர் இன்று காலையிலேயே பதவி ஏற்றுக்கொண்டார்.

லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் கிடையாது. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வந்துவிடும். ஜம்மு காஷ்மீரில் அமையவிருக்கும் சட்டமன்றம் டெல்லியை முன்மாதிரியாக கொண்டு துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

புதிய யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில், தேசிய மனித உரிமை சட்டம், ஜிஎஸ்டி, மத்திய தகவல் சட்டம், எதிரி சொத்து பறிமுதல் சட்டம், பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் 108 சட்டங்கள் இவ்விரு யூனியன் பிரதேசங்களிலும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

நாட்டின் பல யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக உருவெடுத்த நிலையில், முதன்முறையாக ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்துள்ள நிலையில், யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.