சென்னை

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது..

சென்னை நகரின் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரெயில் அறிமுகம் செய்யப்பட்டது.   அது மட்டுமின்றி காற்று, நீர்,  நிலம் மாசடைவதன் முக்கிய காரணம் வாகனப் போக்குவரத்து எனக் கூறப்படுவதால் இதைக் குறைக்க மெட்ரோ ரெயில் சேவையைப் பயன்படுத்த அரசு கோரிக்கை விடுத்து வந்தது.   கடந்த 2014 ஆம் வருடம் ஜூன் மாதம் 29 ஆம் தேதி தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை தற்போது 45 கிமீ தூரத்துக்குச் சேவையை அளிக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை ஒரு பாதையும், சென்னை செண்டிரலில் இருந்து பரங்கிமலை வரை மற்றொரு பாதையிலும் மெட்ரோ ரெயில் இயங்கி வருகிறது.    இந்த சேவை காலை 4.30 மணி முதல் இரவு 11 மனி வரை நீடிக்கிறது.   கடந்த பிப்ரவரி மாதம் இந்த மெட்ரோ ரெயில் முதல் கட்டம் முழுமையாக முடிவடைந்த போது இதில் தினம் சராசரி 78.825 பயணிகள் மட்டுமே  பயணம் செய்தனர்.

அதன் பிறகு பயணிகள் எண்ணிக்கை மெதுவாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.   கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தில் பயணிகள் எண்ணிக்கை தினம் சராசரியாக 78,919 ஆக இருந்தது மாத இறுதியில் 90,878 ஆக உயர்ந்தது.   அப்போதிருந்து  பல இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனப் பயணிகள் மெட்ரோ ரெயிலை தேர்வு செய்ததே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

அதன் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் இந்த பயணிகள் எண்ணிக்கை சராசரியாக 1,05,096 ஆனது.   அதன் பிறகு மெதுவாக அதிகரித்து தற்போது தினமும் சராசரியாக 1,15,695 பயணிகள் பயணிக்கின்றனர்.

மெட்ரோ ரெயில் நிலையங்களில் 10000 பயணிகளுடன் அதிக பரபரப்பாக உள்ள ரெயில் நிலையம் திருமங்கலம் ஆகும்.  இங்கு முகப்பேர், ரெட்டேரி, கொளத்தூர், அம்பத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பலரும் பயணம் செய்கின்றனர்.   இதற்கு அடுத்தபடியாக செண்டிரல், விமான நிலையம் ஆகிய நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை 9500 மற்றும் 9000 ஆக உள்ளது.