Random image

கேரள கன்னியாஸ்திரி புகார்: பிஷப் சார்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடிவு

கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகாரை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட பிஷப் சார்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் போப் ஆண்டவருக்கு கடிதம் எழுதிய நிலையில், விசாரணைக்கு ஆஜராக பிஷ்ப்பூக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

Bishop

கேரள மாநிலம், கோட்டயம் பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தரில் பிஷப்பாக பணியாற்றி வரும் பிராங்கோ முல்லக்கல் தன்னை கற்பழித்ததாக புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் போப் ஆண்டவருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியது பரப்பரப்பை ஏற்படுதியது. கன்னியாஸ்திரியின் புகாரை தொடர்ந்து கோட்டயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கற்பழிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி பிஷப்பிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராக ஒப்புதல் அளித்துள்ள பிஷப், தனது பொறுப்புக்களை மூத்த பாதிரியார் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும், விசாரணைக்கு ஆஜராகும் முன்பு முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது குறித்து பிராங்கோ முல்லக்கல்லின் வழக்கறிஞர் விஜயாபானு பேசுகையில், “ பிஷப் பிராங்கோ முல்லக்கல் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதேசமயம் போலீஸ் விசாரணைக்கு பி‌ஷப் ஆஜராக எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. திட்டமிட்டபடி நாளை அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராவார் “ என்று கூறினார்.

பி‌ஷப் மீதான புகார் பற்றி விசாரணை நடத்தி வரும் கோட்டயம் போலீஸ் அதிகாரி ஹரிசங்கர் கூறியதாவது, “ பஞ்சாப் போலிசார் மூலம் நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு ஏற்கனவே தகவல் கொடுத்து விட்டோம். அவர் கைது செய்யப்படுவாரா? என்பது பற்றி அவருக்கு எதிரான ஆதாரங்களை விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வு செய்த பின்னர்தான் முடிவு செய்ய முடியும். நாளை அவரிடம் நடைபெறும் விசாரணையை தொடர்ந்து கைது நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம் “ என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரிக்கு ஆதரவாகவும் பி‌ஷப்பை கைது செய்ய கோரியும் கொச்சியில் 5 கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இன்று 10-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இதில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரி நேற்று பங்கேற்றார். அவர் பி‌ஷப்பை கைது செய்யும் வரை தான் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

போராட்டம் நடைபெறும் இடத்தில் அவர் படுத்த நிலையில் தொடர்ந்து போராடி வருகிறார். இந்நிலையில் கன்னியாஸ்திரியின் சகோதரியை , நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அன்னா மல்கோத்ரா (வயது 92) சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

You may have missed