Random image

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சர்ச்சைக்குள்ளான பிஷப் பிராங்கோ பதவி விலகல்

திருவனந்தபுரம்:

பாலியல் வன்கொடுமை விவகாரம் காரணமாக கன்னியாஸ்திரிகள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக சர்ச்சைக்குள்ளான பிஷப் பதவி பிராங்கோ பதவி விலகி உள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியே சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் பிராங்கோ முல்லக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வழக்கு பதியப்பட்டுள்ள  நிலையில், நடவடிக்கை எடுக்காமல் தாமதித்தனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கேரள கிறிஸ்தவ அமைப்புகளோ, பெண்கள் அமைப்புகளோ எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. இதையடுத்து கேரள மாநிலம் முழுவதும் கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர்.  ‘எங்கள் சகோதரிக்காக நாங்கள் போராடுகிறோம். தேவாலய நிர்வாகம், அரசு மற்றும் போலீஸ் துறைகள் மூலம் நீதி மறுக்கப்பட்டு வருகிறது. நீதி கிடைப்பதற்காக, நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். பிஷப்புக்கு எதிராக தேவையான ஆதாரங்கள் இருந்தும் அவர் கைது செய்யப்படவில்லை’ என்றனர். இந்த விவகாரத்தில் வாடிகன் தலையிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், கேரள மந்திரி ஈ.பி.ஜெயராஜன், உரிய சாட்சியங்களுடன் குற்றம்சாட்டப்பட்டவரின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து மாநிலகாவல்துறை, கன்னியாஸ்திரி புகார் காரணமாக  விசாரிக்க வேண்டியுள்ளதால் வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராகும்படி பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் போலீசார் பிஷப் பிராங்கோவிடம்  விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் தேவாலய நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து பதவி விலகியுள்ளார். ஆனால் பிஷப்பாக அவர் தொடர்வார் என்று கூறப்படுகிறது.

வாடிகன் நிர்வாகம் தலையிட்டதை அடுத்து அவர் பதவி விலகியதாகவும் அவர் கேரளாவில் இருந்து விரைவில் வெளியேறுவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே இதை வரவேற்றுள்ள கன்னியாஸ்திரிகள், அவர் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.