ராய்ப்பூர்:

கொரோனா ஊரடங்கு சமயத்திலும் 23 கர்ப்பிணி பெண்களுக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்துள்ளார் சத்திஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து பணிகளும் முடங்கிய நிலையில் அரசு மருத்துவமனைகள் உள்பட  சில மருத்துவமனைகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. அதுவும் கொரோனா தொற்று குறித்த சிகிச்சை மட்டுமே அளித்து வந்தன.

இந்த நிலையில்  சத்தீஸ்கர் மாநிலம், சர்குஜா மாவட்டத்திலுள்ள அம்பிகாபூர் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை செவிலியராக பணியாற்றி வரும் ரஜினி குஷ்வாஹா என்பவர், அந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு  ஓய்வெடுக்காமல் பணியாற்றி வந்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் வெளி மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த  23 கர்ப்பிணி பெண்களுக்கு பார்த்துள்ளார், இதில் விசேஷம் என்னவென்றால், 23 பேருக்குமே சுகப்பிரசவம்..

நர்ஸ் ரஜினி குஷ்வாஹா அசராத பணி அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டுதலைப் பெற்றுள்ளது. தற்போது ரஜினி குஷ்வாஹா  பெயர்  இந்தியா  முழுவதும் பரவி வருகிறது.

கொரோனாவுக்கு முன்பு பெரும்பாலான கர்ப்பிணி பெண்களுக்கு அறுவை சிகிச்சை (சிசேரியன்) மூலமே குழந்தைகள் பிறந்து வந்த  நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற்றுள்ளது ஆச்சரியத்தையும், அதேவேளையில், மருத்துவ துறையின் வணிகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இதுகுறித்து கூறிய ரஜினி குஷ்வாஹா, “நான் செய்யும் வேலை எனக்கு மிகவும் மனநிறைவை தருகின்றது.. மற்ற சுகாதார மருத்துவ நிலையங்கள் இருந்தாலும் கூட கர்ப்பிணி பெண்கள் அனைவரும் என்னைத் தேடிவருவது மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ரஜினி குஷ்வாஹாவை பத்திரிகை.காம் இணைய இதழும் வாழ்த்துகிறது.