தலைமை செவிலியர் மரணம்… குழப்பும் ராஜீவ்காந்தி மருத்துவமனை நிர்வாகம்…

சென்னை:
சென்னையில் உள்ள அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 58 வயதான தலைமை செவிலியர் பிரிசில்லா  கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பு கொரோனாவால் ஏற்பட்டது என்று கூறப்பட்ட நிலையில், இன்று,  அவர் கொரோனாவால் இறக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தோல்வி அடைந்த தமிழகஅரசு, உண்மையான தொற்று பாதிப்புகளை வெளியிடாமல் மூடி மறைத்து வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகாக தமிழக அரசால்,  15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்ட தனி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இதுவரை, மண்டலங்களுக்கும் நேரில் செய்து ஆய்வுகள் மேற்கொள்ளாமல் புறக்கணித்து வருகின்றனர்.
தொடக்கத்தில் இருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது.
சென்னையில், மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னை ராயபுரம் பகுதியில் தினசரி பல உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால், அதை தமிழக சுகாதாரத்துறை கண்டுகொள்ளாமல் மறைத்து வருகிறது. அதுபோல பெரும்பாலான மக்கள்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதுகுறித்து அரசிடம் கூறுவதை தவிர்த்து வருகின்றனர். இதற்கு காரணம், மருத்துவமனையிலும் சரியான முறையில் சோதனை மேற்கொள்ளப்படுவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில்தான் தற்போது மூத்த செவிலியர் இறப்பிலும் தமிழகஅரசு முன்னுக்குபின் முரணாக பேசி வருகிறது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தலைமை நர்சாக பணிபுரிந்து வந்தவர் பிரிசில்லா. இவரது பணி கடந்த மார்ச் மாதத்துடன் ஓய்வு பெற இருந்த நிலையில், தமிழகஅரசின் புதிய அறிவிப்பு காரணமாக மேலும் ஒரு வருடம் பணி நீட்டிப்பு பெற்றார்.

இவர்  கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு காரணமாக அங்குள்ள கொரோனா வார்டில் கடந்த 24ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  நேற்று முன்தினம்  (26/05/2020) இரவு  11 மணி அளவில் உயிரிழந்தார். கொரோனாவால் உயிரிழந்த முதல் தலைமை பெண் செவிலியர் இவர்தான்.

அவரது  ‘கேஸ் ஷீட்’டில், பிரிசில்லாவுக்கு கொரோனா தொடர்பான மருத்துவம் வழங்கப்பட்டு வந்தாகவும், அதனால்தான் அவர் இறந்ததாக எழுதப்பட்டிருந்ததாக சக செவிலியர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்,  தலைமை செவிலியர் பிரிசில்லா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகியதாக வெளியான தகவல் தவறு என்று  மருத்துவமனை டீன் ஜெயந்தி மறுத்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் ஜோன் மேரி பிரிசில்லா இறக்கவில்லை என கூறி அவரது உடலை, குடும்பத்தாரிடமே அளித்துவிட்டோம் என்று  மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது.

ஆனால், பிரிசில்லா உடலை பெறுவதற்காக, வந்திருந்த அவரது குடும்பத்தாரோ, அவர் கொரோனாவால்தான் இறந்ததாக தெரிவிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து இறந்த செவிலியரான, பிரிசில்லாவின் சகோதரர் ஊடகம் ஒன்றில் பேசும்போது,  பிரிசில்லாவின் கேஸ் ஷீட்டை எங்களுக்கு ஒருவர் அனுப்பி வைத்துள்ளார். அதில், அவருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மருத்துவமனை நிர்வாகமோ,  உடலை ஒப்படைக்கும்போது, இது பற்றி கேட்டதற்கு, யாராவது,  கேஸ் ஷீட்டில் யாரோ தவறாக எழுதியிருப்பார்கள் என  சொல்கிறார்கள்,  பிரிசில்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை,  தற்போது கொரோனாவால் அவர் இறக்கவில்லை என்று மாற்றி மாற்றி கூறுகின்றனர் என்று வேதனை தெரிவித்து உள்ளார்.

ஆனால், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை  டீன் ஜெயந்தியோ,  செவிலியர் பிரிசில்லாவுக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் இதய கோளாறு  போன்ற நோய்கள் இருந்தன. அதனால்தான் அவர்  உயிரிழந்தார்  அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில், நெகடிவ் என்றுதான் முடிவு வந்துள்ளது என்று ஒரேயடியாக  மறுத்து வருகிறார்.

கொரோனா விவகாரத்தில் மாநில அரசின் முன்னுக்குப் பின் முரணான  செயல்பாடுகள் மக்களிடையே, அதிருப்தியையே ஏற்படுத்தி உள்ளது.