3வது நாள்: செவிலியர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்! அரசு எச்சரிக்கை

சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள  டிஎம்எஸ் வளாகத்தில் இன்று  3-வது நாளாக செவிலி யர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று  உண்ணாவிரத போராட்டத்தை செவிலியர்கள்  தொடங்கி உள்ளனர். நேற்று அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், வாபஸ் அறிவிப்புக்கு பெரும்பாலான செவிலியர்கள் ஒத்துக்கொள்ள மறுத்து, அமைச்ச ரின் உறுதி குறித்து அரசாணை வெளியிட்டால்தான் வாபஸ் பெறுவோம் என்றும், அதுவரை போராட்டம் தொடரும் என்றும், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2012-ம் ஆண்டு சுகாதாரத்துறை நடத்திய போட்டித் தேர்வு வாயிலாக 11000  நர்சுகள் ஒப்பந்தம் முறையில் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு  மாதச் சம்பளமாக 7000 ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது.

அவர்கள் பணி அமர்த்தப்பட்டு  இரண்டு ஆண்டுகளை கடந்தும்,  அவர்களின்  பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. சம்பளமும் உயர்த்தப்படவில்லை.

இதன் காரணமாக  செவிலியர்கள் போராட்டத்தில் குதித்தனர் . கடந்த இரண்டு நாள்களாக சுமார் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகள்  சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று  போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செவிலியர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘செவிலியர்களின் 90 சதவிகித கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய காலஅவகாசம் தேவைப்படும்’ என்றார்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுக்கு, சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ‘நாளைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு பணிக்குத் திரும்பாதவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக செவிலியர்கள் அறிவித்தனர். சிலர் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர்.

ஆனால் ஒரு பிரிவினர், ‘எங்களின் கோரிக்கைகள் குறித்து அரசாணை வெளியிடப்படும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்’ என்று கூறி போராட்டத்தை மூன்றாவது நாளாகத் தொடர்கின்றனர்.

இதையடுத்து, இன்று காலை டி.எம்.எஸ் வளாகத்தில் அரசு சார்பில் எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதில்,  ‘செவிலியர்கள் நடத்தும் போராட்டம் மருத்துவ சேவைகளைப் பாதிக்கிறது. எனவே, செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பலகை, ‘மருத்துவம் மற்றும் கிராமப்புற மருத்துவ சேவை இயக்குநரகம்’ சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது. ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு வருகின்றனர்.