கான்

சீனாவில் தற்போது 90000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தாக்குதலால் உடல் நலம் கெட்டுள்ளதாக செவிலியர் ஒருவர் கூறி உள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது.  அந்த வைரஸ் நாடெங்கும் பரவி தற்போது  உலகத்தின் பல நாடுகளுக்கும் பரவி வருவதாக அச்சம் எழுந்துள்ளது. அதையொட்டி அனைத்து நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீன அரசின் சார்பில் இந்த வைரசால்  சீனா முழுவதுமாக 1975 பேர் பாதிக்கப்பட்டு உடல நலம் கெட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.   நாட்டின் பல நகரங்களுக்குள் செல்லவும் அங்கிருந்து வெளியேறவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தற்போது ஊகான் நகரைச்  சேர்ந்த செவிலியர் ஒருவர் பேசும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.  அந்த வீடியோவில் அவர் சீனாவில் கிட்டத்தட்ட 90000க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா வைரசால் உடல்நலம் கெட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தாம் சொல்வது முழுவதும் உண்மை எனவும் தாம் ஊகான் நகரில் இருந்து பேசுவதாகவும் கூறும் அவர் முக கவசம் அணிந்திருப்பதால் அவருடைய அடையாளம் தெரியவில்லை. அத்துடன் அவர் இந்த விவரங்களை அவர் எங்கிருந்து பெற்றார் என்பது பற்றியும் இந்த வீடியோவில் தெரிவிக்கவில்லை.

இதையொட்டி இந்த வீடியோ போலியானது என ஒரு சிலர் கூறி வருகின்றனர்.  ஆயினும் இது உண்மையானது என சிலர் நம்புவதால் சர்ச்சை எழுந்துள்ளது.