நெட்டிசன்:
பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் (V.k. Sundar) அவர்களின் முகநூல் பதிவு:
சின்ன வயதில் நவம்பர்,டிசம்பர்,ஜனவரி மூன்று மாதங்களுமே கொண்டாட்டமாக இருக்கும்.அதிகாலை எழுந்து பார்த்தால் எதிரில் வருபவர் முகம் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு சூழ்ந்திருக்கும் காட்சி அற்புதமானது.
அந்தக் குளிரைப் போக்கவும் அனுபவிக்கவும் ஆங்காங்கே சோளத்தட்டை,சாமத்தட்டை,வைக்ககோல் எது கிடைக்குதோ அதை அள்ளிவந்து நெருப்பு மூட்டிக் குளிர் காய்வது அன்றாட நிகழ்ச்சி.
1எங்க செட்டு நண்பர்கள் அந்த இடைவெளியில் வெடி தேங்காய் போட்டு குளிருக்கு இதமாகச் சாப்பிடுவோம்.அதென்ன வெடித்தேங்காய் என்பவர்களுக்கு இந்த தகவல் இப்போதும் உபயோகப்படலாம்.
இளவட்டாக இருக்கிற தேங்காயை எடுத்து அதன் உச்சிக்குடுமியை எடுத்துவிட வேண்டும்.தலையில் மூண்டு கண் இருக்கும்.அதில் ஒன்றில் மட்டுமே துளை போடுகிற வசதி இருக்கும்.கோணி தைக்கும் ஊசியால் அதை துளை போட்டு ,தேங்காய் தண்ணிக்குள் பொரிகடலை,கருப்பட்டி,அவல், மூன்றையும் போட்டு நான்றாக ஸ்டப் பண்ணி துளையைக் குச்சியால் அடித்து இறுக்கமாக மூடிவிட வேண்டும்.
இதை அப்படியே நெருப்புக்குள் போட்டுவிட்டால் பக்குவமாக வெந்ததும் சிரட்டை வெடிக்கும் சப்தம் கேட்கும்.அப்போது அதை வெளியில் எடுத்து கத்தியால் கீத்து கீத்தாக வெட்டிச் சாப்பிட்டால் – அந்த சுவைக்கு ஈடு இணை கிடையாது!
3
இந்த பிராசஸ் நடக்கிற போது சில நேரங்களில் யாராவது பெருசு கூதல் காய்கிற குப்பையை ஒதுக்கிறேன் பேர்வழி என்று கையில் வைத்திருக்கும் கம்பைக்கொண்டு கிளறிவிடும் போது சூடாக இருக்கிற தேங்காய் வெளியில் உருண்டு வந்துவிடும்.வாசனை ஊரையே தூக்கும் என்பதால் வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் இருக்கும்.கூடவே நாய்களும் காத்திருக்கும்.இப்படி எதிர்பாராமல் வெளிவருகிற தேங்காயை அதுக்காகவே காத்திருந்ததுபோல் நாய் லபக் என்று கவ்விக்கொண்டு ஓடும்!
சூடாக இருக்கும் தேங்காயை நாயால் உடைக்கவும் முடியாது ; திங்கவும் முடியாது.ஆனால் உருட்டிக்கொண்டே திரியும்!
கடைசியாகச் சொன்ன நாய்க்கதை மாதிரிதான் இருக்கு ; நேற்று அடிச்சுப்புடிச்சு நாலாயிரம் ரூபாய்க்கு இரண்டாயிரம் ரூபாய் இரண்டை வாங்கி வந்தவர்களின் நிலைமை!
எங்க போய்க் கொடுத்தாலும் சில்லறை இல்லை என்று திருப்பி அனுப்புகிறார்களாம்! காலையில் ஒரு அண்ணனிடம் கடைசி நூறு ரூபாயும் தீரப்போகுது,ஒரு ஆயிரம் ரூபாய் சில்லறையா இருந்தா கொடுங்க என்றேன்.இரண்டாயிரம் ரூபாய்த் தாளை எடுத்து ‘வச்சுக்கங்க ணே…எப்பவேணாலும் திருப்பிக் கொடுங்க ‘ என்றார் கொஞ்சமும் தயங்காமல்!
வெடி தேங்காய் மிஸ் ஆனதுதான் ஞாபகத்துக்கு வருது!?