சாதிவெறியால் மாற்றப்பட்ட சத்துணவு ஊழியர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம்

பெற்றோர்களின் சாதி வெறி காரணமாக, வேறு பள்ளிக்கு மாற்றப்பட்ட சத்துணவு ஊழியர் பாப்பம்மாள் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இள்ள திருமலைக் கவுண்டம்பாளையத்தில்  அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 75 மாணவர்கள் படித்துவருகிறார்கள்.

சமீபத்தில் இப்பள்ளிக்கு சத்துணவு ஊழியராகப் பணியிட மாற்றம் பெற்று வந்தார், பாப்பம்மாள் என்ற சமையலர்.

இவர்,  பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இப்பள்ளியில் படிக்கும் மற்ற சாதி மாணவர்களுடைய பெற்றோர்கள் அவரை சத்துணவு சமைக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் பள்ளியின் சத்துணவுக் கூடத்தை ஆக்கிரமித்து, தாங்களாகவே உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்கினர்.

அதோடு, அதிகாரிகளிடம் வற்புறுத்தி பாப்பம்மாளை அவர் முன்பு பணியாற்றிய பள்ளிக்கே இடமாற்றம் செய்ய வைத்தனர்.

பாப்பம்மாள்

பாதிக்கப்பட்ட சமையலர் பாப்பம்மாள் இது குறித்து தெரிவித்ததாவது:

“இந்த திருமலைக் கவுண்டம்பாளையம்தான் எனது சொந்தஊர். இங்கிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒச்சாம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 12 வருடங்களாக  சத்துணவு ஊழியராக பணி புரிந்தேன்.   சமீபத்தில், திருமலைக் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வேலைபார்த்து வந்த சத்துணவு ஊழியர் ஓய்வு பெற்றுவிட்டார்.  அதனால், எனக்கு என் சொந்த ஊரில் உள்ள இந்த பள்ளியில் மாறுதல் அளித்தனர்.  நானும் மகிழ்ச்சியுடன் இங்கு பணியில் சேர்ந்தேன்.

ஆனால் எனது பணி உத்தரவை பள்ளியில் சமர்ப்பித்தவுடனே பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. ஊர்க்காரர்கள் சிலபேர் வந்து, “இழி சாதியில் பிறந்த நீ எப்படி எங்கள் பிள்ளைகளுக்கு சமைச்சுப்போட முடியும்?” என்று  தரக்குறைவாக பேச ஆரம்பித்தனர்.

என் சாதிப் பேரைச் சொல்லி திட்டியதோடு, உனக்கு அரசு வேலை கேட்குதா என்றும் ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.  பிறகு என்னை சமையல்கூடத்தில்  இருந்து  வெளியேறச் சொன்னார்கள். நான் பயந்துகொண்டு வெளியே வந்துவிட்டேன்.

அதோடு, பள்ளி ஆசிரியர்களிடம் சென்று, ஈன சாதியைச் சேர்ந்த பாப்பம்மாள் இங்கே பணிபுரிந்தால் எங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றனர்.

திருமலைக் கவுண்டம்பாளையம் அரசு பள்ளி

இந்த நிலையில் அதிகாரிகளும் அவர்களது பேச்சைக் கேட்டுக்கொண்டு என்னை பழைய பள்ளிக்கே மாறுதல் செய்தார்கள். நாங்களும் மனிதர்கள்தானே… எங்கள் ஊர் பிள்ளைகளுக்கு நான் சமைத்துப்போடக்கூடாதா” என்று பாப்பம்மாள் அழுதார்.

இந்த விவகாரம் வெளியான பிறகு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாதியைச் சொல்லி, ஒரு சமையலரை பணி புரியவிடாமல் தடுப்பதா என சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

பாப்பம்மாளுக்கு ஆதரவாக அவிநாசியை அடுத்துள்ள சேவூர் பகுதியில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதில், மாற்று சாதியினருக்கு ஆதரவாக செயல்படும் பள்ளியின் தலைமையாசிரியர் சசிகலா மீதும், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி மீதும் அரசு துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட சமையலர் பாப்பம்மாளை திருமலை கவுண்டம்பாளையம் பள்ளியிலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பணி உத்தரவு

இந்த நிலையில் சத்துணவு அமைப்பாளர் பாப்பம்மாளுக்கு மீண்டும் அதே, திருமலைக்கவுண்டம் பாளையம் பள்ளிக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.  சார் ஆட்சியர் ஷ்ரவன் குமார் இதற்கான ஆணையை பிறப்பித்தார். மேலும்,  பாப்பம்மாளை பணிமாற்றம் செய்த வட்டார  வளர்ச்சி அலுவலர் மீனாட்சி மீது துறை ரீதியான நடவடக்கை எடுக்கப்படும் என்றும், சாதியைக் காரணம் காண்பித்து பாப்பம்மாளை பணிமாற்ற புகார் அளித்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.