ஜெய்ப்பூர்:

காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் வேலை வாய்ப்பை உருவாக்கும் என்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், கடந்த 2008-ம் ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொருளாதாரத்தை வலுப்படுத்தியது.

இந்தியா முழுவதும் பாஜக அலுவலகம் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது? கருப்புப் பணத்திலிந்துதான் பாஜக அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன.

பாஜக அரசு வெளியேற்றப்பட்டதும் ரபேல் விவகாரம் மற்றும் கருப்புப் பணம் விவகாரம் குறித்து விசாரிக்கப்படும்.

நாட்டில் தற்போது பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது. உத்தரப்பிரதேசத்தில் கூட்டணி அமைக்க முடியாமல் போனாலும், தேர்தலுக்குப் பின் நிலைமை மாறிவிடும்.

பாஜக அரசின் அலட்சியப் போக்கால்தான் புல்வாமா தாக்குதல் நடந்தது. பங்களாதேஷை பாகிஸ்தானிலிருந்து இந்திரா காந்தி பிரித்துக் கொடுத்தபோது, அதை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை.

உணர்சிப்பூர்வ பிரச்சினைகளை பேசி இளைஞர்களை மோடி தவறாக வழி நடத்துகிறார். மோடியும் அமீத்ஷாவும் விரிக்கும் வலையில் இம்முறை இளைஞர்கள் விழப்போவதில்லை.

குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெருகும். மாதந்தோறும் ஏழைகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் இந்த திட்டத்தால், பொருட்கள் வாங்குவதற்கு செலவழிப்பர். இதனால் பணப் புழக்கம் இருக்கும். இத்திட்டம் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் என்றார்.