டில்லி

பிரபல பொருளாதார நிபுணரான சங்கர் சர்மா காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டத்தை புகழ்ந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் நியாய் என்னும் கட்டாய ஊதிய திட்டத்தை அறிவித்துள்ளது.   அதன்படி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.6000 கட்டாய ஊதியம் அளிக்கப்படும் என்பதாகும்.   இந்த திட்டம் நடைமுறைக்கு ஒத்து வராது என பாஜகவினர் கூறினர்.   ஆனால் இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமான ஒன்று என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

பிரபல பொருளாதார நிபுணரும் ஃபர்ஸ்ட் குளோபல் நிறுவனத்தை அமைத்தவரில் ஒருவருமான சங்கர் சர்மா சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில், “பங்குச் சந்தையில் இந்திய பங்குகள் நல்ல மதிப்புள்ளது.   தற்போது தேர்தல் நேரம் என்பதால் சற்றே குறைந்துள்ளது.  விரைவில் சீனா, ரஷ்யா பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பங்குகள் விலை உயர வாய்ப்புள்ளது.

தற்போதுள்ள நிலையில் சிறிய முதலீட்டு நிறுவனங்களும், நடுத்தர முதலீட்டு நிறுவனங்களும் தற்போது மீண்டும் முன்னேற தொடங்கி உள்ளன.   இது இந்திய பொருளாதாரத்தில் ஒரு நல்ல மாறுதலை உருவாக்கும் என நம்புகிறேன்.   பெரிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக கடனில் தவிக்கின்றன.    அதனால் அந்த நிறுவனங்களை விட கடன் தொல்லை இல்லாத சிறிய நிறுவனங்கள் முன்னேற்றம் காணுகின்றன.

கடந்த 1991 முதல் 2014 வரை கூட்டணி ஆட்சியில் நாடு நல்ல முன்னேற்றத்தை அடைந்தது.   எனவே நான் கூட்டணி ஆட்சி அமைவதை விரும்புகிறேன்,  தற்போதுள்ள நிலையில் கூட்டணி ஆட்சி வர வாய்ப்புள்ளதாக தோன்றுகிறது.  தற்போது பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அளித்துள்ள தேர்தல் அறிக்கையை பார்த்தேன்.    இதில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை விரிவாக உள்ளது.

காங்கிரஸ் அறிவித்துள்ள நியாய் என்னும் கட்டாய ஊதிய திட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உண்டாகி இருக்கிறது.    இதற்கு நிதி உதவியை காங்கிரஸ் அரசு அளிக்க வேண்டும்.   அதற்காக செல்வந்தர்களிடம் இருந்து வரி வசூலிப்பதில் தவறில்லை என நான் எண்ணுகிறேன்.   நான் ஒரு டாக்சியில் செல்லும் போது ரூ.70 கட்டணம் என்றால் ரூ.100 அளிப்பேன்.  எனக்கு அந்த ரூ.30 சாதாரணம் என்றாலும் அந்த டாக்சி ஓட்டுனருக்கு அது பெரிய ரொக்கமாகும்.

அது மட்டுமின்றி ஊதியம் சரிவர கிடைக்காத மக்கள் தவறான பாதைக்கு செல்ல நேரிடும்.   இதனால் செல்வந்தர்களுக்கு திருட்டு பயம் அதிகரிக்கும்.   இவைகளை எண்ணும் போது இந்த திட்டம் மிகவும் அவசியம் என நான் கருதுகிறேன்.   மொத்தத்தில் இந்த நியாய் திட்டம் ஏழைகளையும் செல்வந்தர்களையும் இணைக்கும் ஒரு பாலமாக அமையும்” என தெரிவித்துள்ளார்.