முதுமை, உடல் பருமன், வேறு நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் சாத்திய கூறுகள் அதிகளவு உள்ளது என்று கொரோனா வைரஸ் தொற்று தோன்றிய நாட்களில் கூறப்பட்டது.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் ரத்த வகையும் கொரோனா பாதிப்புக்கு ஒரு காரணம் என்று கண்டுபிடித்தது.

நியூயார்க் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட 14000 பேரின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் ‘O’ + பிரிவு ரத்தம் உள்ளவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருந்ததாகவும் அவர்களுக்கு உடல் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பும் குறைவாக இருந்ததாக 2020 நவம்பர் மாதம் வெளியான ‘நேச்சர்’ எனும் மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 4.73 லட்சத்திற்கும் அதிகமான நபர்களிடம் நடத்திய ஆய்வில் ‘ஓ’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருந்ததாக ‘பிளட் அட்வான்ஸஸ்’ என்ற மருத்துவ இதழ் தெரிவித்திருந்தது.

அதே இதழில், கனடாவில் நடத்திய ஒரு ஆய்வில், ஏ (A) பிரிவு ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிக சதவீதம் இருந்ததாக கூறியிருக்கிறது.

ஒவ்வொரு ரத்த பிரிவும் மனித உடலில் வெவ்வேறு சுழற்சி முறையை ஏற்படுத்துவதோடு, ரத்தம் உறைதலிலும் மாறுபட்ட தன்மையை கொண்டுள்ளது, ஓ பிரிவு ரத்தம் உறைதலில் உள்ள வித்தியாசமே இது மற்ற பிரிவுகளில் இருந்து கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதற்கு காரணம் என்று பிரஞ்சு மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான ‘இன்செர்ம்’-மின் ஆராய்ச்சி இயக்குனர் ஜாக்யூஸ் டி பெண்டு கூறியுள்ளார்.