சென்னை: தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். பன்னீர்செல்வத்துக்கே மத்திய அரசு ஆதரவு உண்டு என்று மூத்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார். இந்த பேட்டி சசிகலா தரப்பை எரிச்சலடைய செய்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக.வில் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரின் ஆதரவாளர்கள் இரு பிரிவாக செயல்படுவதை போன்ற செய்திகள் வெளியாகி வருகின்றன.

 
இந்த நிலையில் தமிழ்நாட்டு தனியார் டிவி ஒன்றில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அளித்த சிறப்பு பேட்டி: அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக.வுக்கு அக்கறையில்லை. ஆனால், எங்கள் ஆதரவு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்குதான் உண்டு. யார் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்? அவர் பன்னீர்செல்வம் தான். பன்னீர் செல்வத்தைதான் ஜெயலலிதா ஏற்கனவே முதல்வராக தேர்ந்தெடுத்தார். அதுதான் அதிமுக கட்சியின் விருப்பம். பன்னீர் செல்வம்தான் தமிழக முதல்வர். எனவே அவரோடுதான் மத்திய அரசு தொடர்பு கொள்கிறது. தேவைப்படும் அனைத்து உதவிகளையும் பன்னீர்செல்வம் அரசுக்கு மத்திய அரசு வழங்கும். இவ்வாறு வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மத்திய அரசு பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து விட்டு திரும்பிய மறுநாளே, சசிகலா பிரதமர், ஜனாதிபதி ராகுல் காந்திக்கு கடிதம் எழுதினார்.
அதில் ஜெயலலிதாவில் இறுதி சடங்கில் கலந்துகொண்டதற்கு சசிகலா நன்றி தெரிவித்திருந்தார். இதன் மூலம் டெல்லியில் உள்ளவர்களுக்கு தான் தான் ஜெயலலிதாவின் வாரிசு என்பதை சசிகலா சூசகமாக சொல்ல நினைத்தார். ஆனால் வெங்கையா நாயுடுவின் தற்போதைய பேட்டி சசிகலா தரப்பை எரிச்சலடைய செய்துள்ளது