சென்னை:

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு குடியிருப்பை காலி செய்யும்படி தமிழக அரசு கூறிவிட்டதால், போயஸ் கார்டன் அருகில் உள்ள வீனஸ் காலனியில் குடியேறுகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழக அமைச்சர்களுக்கு சென்னை கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள அரசு வீடுகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம். இந்த வகையில் அமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தபோது இதே சாலையில் தான் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு குடியிருந்து வந்தார். முதல்வராக பதவி ஏற்ற பிறகும் இதே வீட்டில் தான் பன்னீர்செல்வமும் வசித்து வந்தார்.

முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றார். சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள அரசு வீட்டை காலி செய்யும்படி பன்னீர்செல்வத்துக்கு தமிழக அரசு நெருக்கடி கொடுக்க தொடங்கியது.

தற்போது அவர் அமைச்சரும் இல்லாத காரணத்தால் அந்த வீட்டை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வீட்டை காலி செய்ய தமிழக அரசு கொடுத்த கெடு முடிய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. மேலும், பன்னீர்செல்வத்துக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

அதிமுக.வை சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் செல்லும் விழாக்களுக்கு கூட கட்சியினரும், மக்கள் அதிக அளவில் கூடுவதில்லை. அதே சமயத்தில் பன்னீர்செல்வத்தை காண தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் சென்னைக்கு தினமும் படையெடுத்து வருகின்றனர். இதனால் அதற்கு ஏற்ற வீடு பார்க்கும் பணியில் பன்னீரும், அவரது ஆதரவாளர்களும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் அருகே உள்ள வீனஸ் காலனியில் வீடு பார்க்க பன்னீர்செல்வம் இன்று வந்தார். அங்கு அவர் பார்த்த வீடு அவருக்கு பிடித்துவிட்டது. இதனால் அந்த வீட்டில் அவர் குடியேற முடிவு செய்துவிட்டார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.