சென்னை: மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி, அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவில்,  தமிழக அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50%  இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழகஅரசு உள்பட அரசியல் கட்சிகள் அனைத்தும் இணைந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு ஜூலை இறுதியில்  பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில், ‘இட ஒதுக்கீடு வழங்குவதை உச்ச நீதிமன்றம் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்ற மருத்துவக் கவுன்சிலின் விளக்கத்தை ஏற்கமுடியாது, முப்பது ஆண்டுகள் முன்னர் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மத்திய அரசு இட ஒதுக்கீடு குறித்த சட்டத்தைக் கொண்டு வர முடியும்.  ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்விதத் தடையும் இல்லை.

மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், மருத்துவக் கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும். இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து முடிவெடுக்க மாநில அரசு மற்றும் மருத்துவ கவுன்சில் 3 பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து முடிவெடுக்க வேண்டும். 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். இதன் முடிவை அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும்’ என உத்தரவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, மருத்துவ படிப்பில்,  50% தமிழக ஓபிசி மாணவர்களுக்கு  இட ஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட உள்ள குழுவுக்கு தமிழக அரசு சார்பில் “தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின்” நிர்வாக இயக்குனரான அனுபம் மிக்க உமாநாத்தை நியமித்து தமிழக தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.