சென்னை: கோவை தடாகம் மலை அடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டு உள்ள 200 செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலைப் பகுதி பாதுகாப்பு அமைப்பின் அனுமதி பெறாமல் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள 200 செங்கல் சூளைகளை மூடக் கோரி சின்ன தடாகத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும், யானைகள் நல ஆர்வலரான முரளிதரனும் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தங்கள் மனுக்களில், கோவை மாவட்டத்தில் உள்ள சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, சோமையம்பாளையம், பன்னீர்மடை ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், நில வளத்திற்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவானது தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், செங்கல் சூளைகளையும் அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், அது குறித்த அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்யுமாறு தலைமை வனப்பாதுகாவலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.