அக்டோபர் 27: காவிரிக்காக அமைச்சர் பதவியை துறந்த மக்கள் தலைவர் வாழப்பாடியார் ’17வது நினைவு நாள்’ இன்று

மிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி கூ.இராமமூர்த்தியின் 17வது நினைவு நாள் இன்று.

தமிழக மாநில காங்கிரஸின் தலைவராகவும், ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும், இருமுறை மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி.

1977 பொதுத் தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில்  போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  1980, 1984, 1989, 1991 பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1998 தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1991-92ல் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது, 1992-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு சாதகமாக செயல்பட்டது. இதனால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தமிழக மக்கள் மத்தியில் புகழ் பெற்றார்.

இடையில் சிறிது காலம் காங்கிரசில் இருந்து விலகி திவாரி காங்கிரசில் இணைந்து அதன் தமிழ்நாட்டுத் தலைவராகப் பணியாற்றினார். அப்போது, 1996ம் ஆண்டு தமிழகத்தில் தமிழகத்தில்  நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

அதையடுத்து, தமிழக ராஜீவ் காங்கிரஸ்  என்ற புதிய  கட்சியைத் தொடங்கி பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து 1998 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று,  அடல்பிகாரி வாஜ்பாய் தலைமை யிலான மத்திய அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

பின்னர்,  2001ம் ஆண்டு தனது , தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தாய்க்கட்சி யான காங்கிரசில் இணைந்து சேவையாற்றி வந்தார்.

இந்நிலையில்  2002ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி திடீர்  மாரடைப்பு காரணமாக மரணத்தை தழுவினார்.

அவருடைய இழப்பு தமிழக காங்கிரசுக்கும், விவசாயிகளுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்தது. காவிரி உள்ளவரை வாழப்பாடியாரும் புகழும் நிலைத்து நிற்கும்…  தமிழக வரலாற்றில் வாழப்பாடியார் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி