டில்லியில் மீண்டும் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண் வாகன விதி அமல்

டில்லி

டில்லியில் மீண்டும் ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண் வாகன விதி அமலுக்கு வர உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டில்லியில் மாசு மிகவும் அதிகரித்து வருகிறது.   இதற்கு முக்கிய காரணம் இந்த நகரில் உள்ள வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை எனக் கூறப்பட்டது.   அத்துடன் நகரில் ஏராளமான வாகனங்கள் ஓடுவதால் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டது.   இதை சரியாக்க கடந்த 2016 ஆம் வருடம் ஒற்றைப்படை இரட்டைப்படை எண் வாகன விதி அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த  விதியின்படி டில்லி நகரில் ஒற்றைப்படை இலக்கத்தில் முடியும் பதிவு எண் கொண்ட வாகனங்கள் ஒற்றைப்படை தேதியிலும் இரட்டைப்படை இலக்கத்தில் முடியும் பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் இரட்டைப்படைத் தேதியிலும் செல்ல வேண்டும் என்பதாகும்    இது நகரில் உள்ள வாகனங்களுக்கு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு அமலாக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் இந்த விதியில் இருந்து ஒரு சில வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.   அந்த விதி நாளடைவில் சிறிது சிறிதாக பின்பற்றப்படாமல் போனது.  தற்போது தீபாவளி நெருங்குவதால் மீண்டும் காற்று மாசடைய வாய்ப்பு உள்ளது.   அதனால் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த ஒற்றைப்படை இரட்டைப்படை விதியை வரும் நவம்பரில் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் 15 ஆம் தேடி வரை இந்த விதிகள் அமலில் இருக்கும் எனவும் அதன்பிறகு தேவைப்பட்டால் இது நிரந்தரமாக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.