புவனேஸ்வர் :  ‘அம்பான்’ கரையை கடக்க இருக்கும் சூழ்நிலையில் ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது.
வங்கக்கடலில் 3 நாட்களுக்கு முன்பு உருவான அம்பான் என்று பெயரிடப்பட்டுள்ள புயலானது, சற்று வலு குறைந்து, மிக தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. கொல்கத்தாவுக்கு தென் கிழக்கே, 400 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்த புயல் நாளை இரவு, மேற்கு வங்கத்தில் கரையை கடக்கும்.
இந்த சூப்பர் புயல் காரணமாக, வங்கக் கடலில் அலைகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன. இந் நிலையில் புயலால் இன்று ஒடிசா, மேற்குவங்க மாநில கடலோர பகுதிகளில் கடும் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.
புயல் பாதிப்புள்ள ஒடிசா கடலோர பகுதிகளில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மேலாண் மீட்பு படையினர் இறங்கி இருக்கின்றனர். அந்தமான் நிகோபார் முதல், வங்கதேசம் வரையில், வங்கக் கடலுக்குள் மீனவர்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் உள்ளிட்டவை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.