பிரதமர் மோடியைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒடிசா, பீகார் முதல்வர்கள்

டெல்லி: நாடு முழுவதும் இன்று 2வது கட்டமாக 60வயது முதியோர்களுக்கு தடுப்பூசி போடும் நிகழ்வு தொடங்கிய நிலையில், இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், பிரதமர் மோடி முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். இதையடுத்து, ஒடிசா, பீகார் மாநில முதல்வர்களும் இன்று தடுப்பூசிப் போட்டுக்கொண்டனர்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல்கட்ட  தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி,  அரசியல் கட்சித் தலைவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முந்தக் கூடாது என்று கூறினார். இதற்கு சில கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அந்தந்த நாட்டின் உயர் தலைவர்கள் தடுப்பூசிகள் எடுத்துக்கொள்ளும்போது, அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பொதுமக்களிடையே நம்பிக்யை ஏற்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில்,  2வது கட்ட தடுப்பூசி போடும்பணி இன்று தொடங்கியது. இந்த முறை, 60 வயது முதியவர்கள் மற்றும் வேறு நோய் தாக்கம் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

இந்த நிலையில்,  பிரதமர்  மோடி   இன்று காலையிலேயே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று, தடுப்பூசி போட்டுக்கொண்டு, திட்டத்தை  தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் தடுப்பூசி போட்டுவருகின்றனர்.

அந்த வகையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  நிதிஷ் குமார், பீகாரில் கொரோனா தடுப்பூசி முற்றிலும் இலவசம். தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது” என்றார்.

தடுப்பூசி எடுத்துக்கொண்டது தொடர்பாக டிவிட் பதிவிட்டுள்ள ஒடிசா முதல்வர் நவீஙன பட்நாயக், “கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை உங்களிடம் மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கடினமான நேரத்தில் தடுப்பூசி கண்டுபிடித்த நமது ஆராய்ச்சியாளர்களுக்கும் அதைச் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் சுகாதாரத் துறையினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டு ஒடிசாவை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.