ஒடிசாவில் பிராமணர்களை தரக்குறைவாக விமர்சித்த அமைச்சர் பதவி நீக்கம்

புவனேஸ்வர்:

பிராமண சமுதாயம் குறித்து தரக்குறைவான வகையில் பேசிய வேளாண் துறை அமைச்சர் தாமோதர் ராவுத்தை அமைச்சரவையில் இருந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாய் நீக்கியுள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எந்த ஜாதி, சமயம் அல்லது மதம் குறித்து யார் தரக்குறைவாக பேசினாலும் அதை நான் பொறுத்துக் கொள்ளமாட்டேன். அதனால் ராவுத் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

பீஜூ ஜனதா தள கட்சியின் துணைத் தலைவராக உள்ள ராவுத்திடம் இது குறித்து கருத்து பெற முடியவில்லை. அவர் தொகுதிக்கு வெளியே இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

முன்னதாக கடந்த 17ம் தேதி மால்கங்கிரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராவுத் பேசுகையில், ‘‘மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் ஒரு மலை வாழ் மக்கள் பிச்சை எடுப்பதை பார்கக முடியாது. ஆனால், பஸ் ஸ்டாண்டுகளில் பிராமண சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் பிச்சை எடுப்பதை பார்க்க முடியும்’’ என்று தெரிவித்திருந்தார்.ராவுத்தின் இந்த கருத்துக்கு மாநில முழுவதும் பிராமண சமுதாய மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், தர்ணா போராட்டங்களும் நடந்தது.

75 வயதாகும் ராவுத்தை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதன் விளைவாக தான் ராவுத் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒடிசா மாநில மொத்த மக்கள் தொகையில் பிராமன சமுதாய மக்கள் 9 சதவீதம் பேர் இருக்கின்றனர்.

பாரதீப் தொகுதியை சேர்ந்த ராவுத் 7 முறை எம்எல்ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர். பல்வேறு பூச்சிகள் தாக்குதல் காரணமாக மாநிலத்தில் விவசாயம் கடுமையாக பாதித்தது. இதனால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொண்டனர். அப்போது தற்கொலை செய்துகொண்ட ஒரு விவசாயி வீட்டிற்கு செல்ல ராவுத் மறுத்தார். அவர் எங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லை என்று ராவுத் கூறியது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.