ஒடிசா மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதாக, புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு அம்மாநில போக்குவரத்து காவல்துறையினர் 47 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் கந்தாரி கதுவா. இவர் தனக்கு சொந்தமான ஆட்டோ ஒன்றை, அதே பகுதியை சேர்ந்த ஹரி பந்து கன்ஹர் என்பவரை ஓட்டுநராக நியமித்து, இயக்க அனுமதி கொடுத்திருக்கிறார். இன்று பகல் 12 மணிக்கு கடும் குடி போதையில் தனது நண்பர்கள் சிலருடன் ஆட்டோ ஓட்டி வந்த ஹரி பந்து கன்ஹர், போக்குவரத்து காவலர்களிடம் வசமாக சிக்கியுள்ளார். அவர் குடிபோதையில் இருப்பதை அறிந்த காவலர்கள், அது தொடர்பாக சோதனை செய்து, உறுதி செய்தனர். பின்னர் அவரிடம் ஓட்டுநர் உரிமம், வாகன காப்பீடு உட்பட ஆவணங்ளை கேட்டபோது, ஆவணங்கள் தன்னிடம் இல்லை என்று ஹரி பந்து கன்ஹர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆட்டோவை பறிமுதல் செய்த ஒடிசா மாநில போக்குவரத்து காவலர்கள், புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி, ஆட்டோ உரிமையாளரான கந்தூரி கதுவா மற்றும் ஓட்டுநர் ஹரி பந்து கன்ஹர் ஆகியோருக்கு ரூ. 47,500-ஐ அபராதமாக விதித்து, அதற்காக மிகப்பெரிய ரசீது ஒன்றையும் அளித்துள்ளனர்.

ஒடிசா மாநில போக்குவரத்து காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை, தேசிய அளவில் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.