கல்விக்கு வயதில்லை: 64வயதில் மருத்துவப் படிப்பு கனவை நிறைவேற்றிய வங்கி அதிகாரி….

புவனேஷ்வர்:  ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவர், தனது கனவு படிப்பான மருத்துவப் படிப்பை, தனது 64வயதில் தற்போது நிறைவேற்றி உள்ளார். கல்விக்கு வயதில்லை என்பதை அவரை நிரூபித்துள்ளார்.

ஒடிஷாவின் பர்கார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்கிஷோர் பிரதான். 64 வயதான அவர் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவம் (MBBS) படிப்பில் சேர்ந்துள்ளார். சிறுவயதிலேயே மருத்துவர் ஆகும் என ஆசையில் படித்து வந்தவர், எதிர்பாராதவிதமாக அவரது ஆசை நிறைவேறாத நிலையில், தொடர்ந்து படித்து பட்டம் பெற்று, வங்கிப்பணியிலும் சேர்ந்து பணியாற்றினார். இருந்தாலும், அவரது மருத்துவ கனவு ஆழ்மனதில் இருந்துகொண்டே வந்தது.

இந்தநிலையில், கடந்த 2016ம் ஆண்டு வங்கிப்பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து, மீண்டும் அவர் தனது கனவை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.  நீட் தேர்வுக்கு வயது வரம்பில்லை  என்பதால்,  அதில் தேர்வாகி மருத்துவக்கனவை நிறைவேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார். அவரது நண்பர்கள் மற்றும் சிலர் அவரது ஆசையை பரிகசித்தாலும், குடும்பத்தினர் ஆதரவு இருந்ததால், நீட் நுழைவுத் தேர்வு எழுத தயாரானார். அதன்படி கடந்த ஆண்டு நீட் தேவை எழுதி வெற்றிபெற்றதுடன்  அதைத்தொடர்ந்து நடைபெற்ற கவுன்சிலிங்கிலும் தேர்வாகி தனது மருத்துவக்கனவை நிறைவேற்றி உள்ளார்.

ஒடிசா மாநிலம் சாம்பல்பூர் மாவட்டம் புர்லா அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். மருத்து ( MBBS) படிப்பில் சேர்ந்து ஆச்சர்யப்படுத்தி இருப்பதுடன் தனது கனவையும் நிறைவேற்றி  உள்ளார்.

கனவுகளை நிஜமாக்கவும், கல்விக்கும்  வயது  தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மகிழ்ச்சியுடன்  கூறியதாவது,  நீட் தேர்வுக்கான தான் தினசரி 10 மணி நேரம் முதல் 12 மணி வரை படித்து வந்ததால், இதனால் தேர்வை எளிதில் எதிர்கொள்ள முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  தனது தந்தைக்கு செய்த அல்சர் அறுவை சிகிச்சை காரணமாக அவர் கூடுதலாக 30 ஆண்டுகள் வாழ்ந்ததாக  தெரிவித்தவர்., அது தனது மனதில் மருத்துவம் படிக்க மேலும் ஆசையைத்தூண்டியது என்று கூறியுள்ளார்.

தற்போது ,  அவர் எம்பிபிஎஸ் படிக்கும் அதே மருத்துவக்கல்லூரியில், அவரது மகள்  2ம் ஆண்டு பல் மருத்துவம் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.