Random image

‘ரூ.45 லட்சம் செலவு ஏன்?’ கவர்னரிடம் கேள்வி எழுப்பிய ஒடிசா மாநில அரசு

புவனேஷ்வர்:

நாடு முழுவதும் மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே நடைபெற்று வரும் லடாய் தற்போது பெருமளவில் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.

ஒடிசா மாநில கவர்னர் கடந்த மாதம் ரூ.45 லட்சம் செலவு செய்திருப்பதாக, மாநில அரசுக்கு அளித்த அறிக்கையை தொடர்ந்து, செலவுக்கான காரணம் என்ன என்று ஒடிசா மாநில அரசு விளக்கம் கேட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாநில கவர்னர் கணேஷி லால் உடன் முதல்வர் நவீன் பட்நாயக்

.ஒடிசா கவர்னாக கடந்த மே மாதம் கணேஷி லால் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த மாதம் ஜெட் விமானத்தில் டில்லிக்கு சென்றார். அங்கிருந்து வாடகைக்கு ஹெலிகாப்டரை எடுத்து, உ.பியில் உள்ள தனது சொந்த ஊரான சிர்ஸாவுக்குச் சென்றார். இதில் ஜெட்விமானத்தை பயன்படுத்திய வகையில், ரூ41.18 லட்சமும், ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்ததில் ரூ.5 லட்சமும் செலவானது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஆளுநர் கணேஷ் லாலின் இந்தச் செலவுகளுக்கு விளக்கம் கேட்டு முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசில் பொது நிர்வாகத்துறை  நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில் ஜெட்விமானத்தையும், ஹெலிகாப்டரையும் என்ன காரணங்களுக்காக பயன்படுத்தினீர்கள், செலவு செய்யப்பட்டது உண்மைதானா என்று கேட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  ஒடிசா மாநில கவர்னர் அலுவலக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், மாநில அரசு அனுப்பியுள்ள நோட்டீசை ஏற்று, விமானம், ஹெலிகாப்டர் பயன்படுத்தியதற்கான சான்றிதழை அனுப்பிவைப்போம் எனத் தெரிவித்துள்ளார். இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஏற்கனவே டில்லி, புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் மாநில அரசுக்கும், கவர்னர்களுக்கும் இடையே சர்ச்சை கள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது ஒடிசா  கவர்னருக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.