Random image

ஒடிசாவில் முன்னாள் எம்பி ஹெலிகாப்டர் பறிமுதல்……போலீஸ் திடீர் நடவடிக்கை

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா லோக்சபா தொகுதி எம்.பி.யாக இருந்தவர் பய்ஜெயந்த் ஜெய் பாண்டா. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கடந்த ஜனவரி 24ம் தேதி பிஜூ ஜனதா தள கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் மே 28ம் தேதி கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இவரது ஹெலிகாப்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அது நின்ற இடத்திலேயே சீல் வைத்துள்ளனர். புரி அரக்ககுடா கடற்கரை காவல் நிலையத்தில் சில்லிக்கா வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் அளித்த புகாரில் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் ஏரியில் உள்ள டால்பின்கள் மற்றும் மீன் பெருக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதோடு சுற்றுசூழல் பாதிப்பு அச்சம் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் ஹெலிகாப்டர் பறந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த ஹெலிகாப்டரை இயக்கி வரும் இந்தியன் மெட்டல்ஸ் மற்றும் ஃபெரோ அலாய்ஸ் நிறுவன அதிகாரிகளிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து பாண்டா டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘ஒடிசாவில் எனது செயல்பாடுகளை முடக்க முயற்சி நடக்கிறது. ஆனால் அதை யாராலும் தடுக்க முடியாது. ஃஎப்ஐஆரில் சனிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு ஹெலிகாப்டரை நிறுத்த முயன்றதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் விமான பதிவேடுகளின் படி ஹெலிகாப்டர் மதியம் 1.26 மணிக்கு புவனேஸ்வரை அடைந்துவிட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் புவனேஸ்வர்-ராஜ்ஹன்ஸ்-புரி-கொனார்க்-கராத்பூர்-ஜகன்த்ப்பூர் வழித்தடத்தில் உரிய அனுமதியுடன் பறந்ததாக பிஜூ பட்நாயக் சர்வதேச விமானபநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.