புபனேஷ்வர்: குறிப்பிட்ட பாடங்களுக்கான கற்பித்தல் நேரத்தை அதிகரித்து, வகுப்பறை நேரத்தைக் குறைக்கும் வகையிலான ஒடிசா அரசின் அறிவிப்பு அம்மாநிலத்தில் கலவையான கருத்துக்களை எதிர்கொண்டுள்ளது.

உயர்கல்வி தொடர்பான செயல்திட்டத்தை (வெளிப்படைத்தன்மை, குழு செயல்பாடு, தொழில்நுட்பம், நேரம் மற்றும் மாற்றம்) அறிவித்தப் பிறகு, இந்தப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஒடிசா அரசு.

கணிதம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கு, ஆய்வின் அடிப்படையில் கற்பித்தல் நேரத்தை அதிகரிக்கும் அறிவிப்பை அம்மாநில கல்வி அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஷ் வெளியிட்டார். மேலும், இந்தப் புதிய அறிவிப்பு நாட்டிலேயே முதன்மையானதா? என்பதைப் பற்றி ஆய்வுசெய்யவில்லை என்றும், பள்ளியின் தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்தே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், 70% முதல் 90% வரையிலான மாணாக்கர்கள் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் பலவீனமாக உள்ளனர் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்தது. எனவே, இந்த ஆய்வின் அடிப்படையிலேயே கற்பித்தல் நேரம் அதிகரிக்கப்பட்டது என்றார் அமைச்சர்.

அதேசமயம், இந்தப் புதிய முடிவு நடைமுறையில் எப்படியான தாக்கத்தை செலுத்தும் என்பதும் ஆராயப்படும் என்றுள்ளார் அவர். அதேசமயம், இந்த முடிவுக்கு அம்மாநில கல்வியாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேற்கண்ட பாடங்கள் எவ்வளவு நேரம் கற்பிக்கப்படுகிறது என்பதைவிட, எப்படி கற்பிக்கப்படுகிறது என்பதுதான் முக்கியம் என்றுள்ளனர் அவர்கள்.