ஸ்ரீநகர்:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  பகுதியில் உள்ள பொதுமக்கள் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எதிராக போர்கொடி தூக்கி உள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெரும்பகுதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளில் அமைந்துள்ள இப்பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்  பயங்கரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இங்குதான் பயங்கரவாதிகளின் கூடாரமும் உள்ளது. இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி முகாம்களை நொறுக்கியதும் இந்த பகுதிதான்.
ஆனால்,  ஆக்கிரமிப்பு காஷ்மீரில், கூட்டாட்சி அமைப்பின் கீழ் மாநில அரசு உள்ளது.  ஆனால் இங்கு பாகிஸ்தான் அரசின் அதிகாரமே மேலோங்கியுள்ளது. இதனால் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் அனைத்தும்  தங்கள் தலைமை அலுவலகங்களை இங்குதான் அமைத்துள்ளன.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத இயக்கங்களின் தலைமையகம், பயிற்சி அளிக்கும் முகாம்கள் இங்குதான் செயல்பட்டு வருகிறது.
இத்துடன் ஒவ்வொரு பயங்கரவாத அமைப்பும், இஸ்லாமிய அறக்கட்டளைகள் அமைத்து, அவற்றின் மதரஸாக்களில் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் நடத்தி வருகின்றன.
காஷ்மீரில் உள்ள   உரி எல்லைப்பகுதி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளும் இங்கிருந்துதான் வந்து தாக்கியுள்ளார்கள் என தெரிய வந்தது.  இதை தொடர்ந்தே  இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத முகாம்களை அமைத்து, பயிற்சி அளிப்பதற்கும் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் கில்கிட்-பால்டிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலுசிஸ்தானில் சுதந்திர ’கோஷம்’ முழங்கிவருகிறது. இதனால் அவர்களை ஒடுக்க  பாகிஸ்தான் ராணுவம் வன்முறையை  கையாண்டு வருகிறது, பாகிஸ்தான் பாதுகாப்பு படை மனித உரிமைகள் மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இதனால் பொறுமை இழந்த மக்கள் ராணுவத்தின் செயல்பாடுகளை கண்டித்து   போராட்டம் நடத்திவருகின்றனர்.
இப்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லி பகுதி உள்ளூர் மக்கள், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறையின் அட்டூழியங்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.