கொழும்பு:

லங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது,  காணாமல் போனவர்கள் மற்றம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு  இலங்கை வடக்கு மாவட்டங்களில் விரைவில் அலுவலகம் திறக்கப்படும் என்று வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி தெரிவித்து உள்ளார்.

இலங்கையில் உள்நாட்டுப்போர் தொடங்கிய 30 ஆண்டுகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழகர்கள் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற உச்சகட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரண் அடைந்தனர். இவர்களில் பலர் உரிய விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதுபோல, விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து பின்னர் சரண் அடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இவர்களில் சுமார் 6 ஆயிரம் பேர் சீர்திருத்த முகாம்களில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக அரசு கூறி வருகிறது. ஆனால், பல ஆயிரம் பேர் மாயமானதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தங்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பி அங்குள்ள தமிழர்கள் அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணாமல் போனவர்கள் குறித்து, புகார் அளிக்கும் வகையில், விரைவில் அலுவலகம் அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

வரும் செப்டம்பருக்குள்  வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் காணாமல் போனர்வர்கள்  தொடர்பாக அலுவலகத்தை உருவாக்குவோம் என்றவர்,  மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும். அவர்கள் என்ன தீர்வை விரும்புகின்றார்களோ அந்தத் தீர்வுகளுக்கான அனுசரணையை நாங்கள் வழங்க வேண்டுமே ஒழிய அவர்கள் என்ன செய்ய வேண்டுமென நாங்கள் சொல்ல கூடாது. ஆகையினால் பாதிக்கப்பட்டவர்களிடம்தான் நாங்கள் கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

ஏற்கனவே காணாமல் போன தமிழர்கள் குறித்தும், அவர்களின் நிலை என்ன? என்பது குறித்து முல்லைத்தீவு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின்மீது இரண்டாவது முறையாக கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் எம்.எஸ்.எம். சம்சுதீன், உச்சகட்ட போரின்போது சரணடைந்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு தாக்கல் செய்ய இலங்கை ராணுவத்துக்கு உத்தரவிட்டார். ஆனால், ராணுவம் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த தகவலை மட்டுமே தெரிவித்தது.

இதற்கிடையில், சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் என்னும் அமைப்பு கடந்த மாதம், போரின்போது காணாமல் போன 280 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இதில் 29 குழந்தைகளும் அடங்குவர். இது இலங்கையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.