கஜா கொடூரம்:  நிவாரணப் பொருட்களை வாங்க பணம்  கேட்கும் அதிகாரிகள்

--

ஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்னையிலிருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற தன்னார்வலர்களிம் நிவாரணப் பொருட்களைக் கீழே இறக்க பணம் கேட்ட அதிர்ச்சி சம்பவம் நாகையில் நடந்துள்ளது.

நாகை வேதாரண்யம் இடையே கரையைக் கடந்த கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடற்கரை பகுதிகளில் மீனவர்களின் படகுகள் நாசமாயின.

இதனால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததோடு, உணவு குடிநீர் கூட இன்றி தவிக்கிறார்கள்.

ஐந்து நாட்களாகியும் இன்னும் பெரும்பாலான இடங்களுக்கு மின்சாரம் வரவில்லை.  குழந்தைகளுக்கு பால்  கிடைக்காமல் மக்கள் தவிக்கிறார்கள்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க நிவாரண  பொருட்களுடன் ஏராளமான தன்னார்வலர்கள் அப்பகுதிகளுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் சேகரித்த பொருட்களை  லாரிகளில் ஏற்றி பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சேர்க்கின்றனர்.

இப்படி நாகை சென்ற தன்னார்வலர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

காய்கறிகள், பழங்கள், அரிசி, பருப்பு, மளிகைப்பொருட்கள், தண்ணீர், மெழுகுவர்த்திகள், துணிகள், நாப்கின்கள் என மக்களுக்கு தேவைப்படும் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருட்களை “அங்காடி நிர்வாகக்குழு உறுப்பினர்கள்” திரட்டிச் சென்றனர். இன்று அதிகாலை 3 மணிக்கு நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர்களை வேர்ஹவுஸ் என்கிற இடத்திற்கு அதிகாரிகள் அனுப்பினர்.  இரண்டு லாரிகளில் பொருட்கள் கொண்டு வரப்பட்டதை இறக்க முடியாது என்று அதிகாரிகள் மறுத்து விட்டனர்.   லாரியில் இருந்து பொருட்களை இறக்குவதற்குக் கூலியாக தலா 2000 ரூபாய் தர வேண்டும் என்றும்,  இல்லாவிட்டால் பொருட்களை கீழே இறக்க அனுமதிக்க முடியாது என்றும் கூறிவிட்டனர்.

நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்த தன்னார்வலர்கள், இதனால் கடும் அதிர்ச்சியடைந்தனர்.  அதிகாரி வாங்க மறுப்பதால் நாகை வெளிப்பாளையம் புது பேருந்து நிலையத்தில் பல மணி நேரமாக காத்திருந்த பின் ஒரு லாரிக்கு ரூ.1500 வீதம் 2 லாரிக்கு ரூ.3 ஆயிரத்தை சொந்தப் பணத்திலிருந்து கொடுத்து நிவாரணப் பொருட்களை லாரியிலிருந்து இறக்கியுள்ளனர்.

மேலும் காய்கறி, பழங்களை ஏற்றிச் சென்ற இரண்டு லாரிகளை வேறொரு இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் நிலை என்னவென்று தெரியவில்லை என்று அங்காடி நிர்வாகக் குழுவினர் கவலையுடனஅ தெரிவிக்கின்றனர்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு வரும் தன்னார்வலர்களிடம் அரசு அதிகாரிகள் பணம் பிடுங்குவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#Officers #Askmoney #refusing #buy #relief #supplies

You may have missed