தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்பது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் வேதாந்த குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட நூறாவது நாள் போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இதற்கு நாடு முழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டு யார் என்பது குறித்து முதல் தகவலறிக்கையில் (எப்.ஐ.ஆர்) தெரிய வந்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் துப்பாக்கியால் சுடுவதற்கு மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார் என்றும் கலெக்டர் அலுவலக பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு தூத்துக்குடி தனிதுணை வட்டாட்சியர் (தேர்தல்) சேகர் உத்தரவிட்டுள்ளார் எனறும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கலவரக்காரர்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானதால் துப்பாக்கியால் சுடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எப்.ஐ.ஆர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கண்ணீர் புகைகுண்டு, ரப்பர் தோட்டா, வானத்தை நோக்கி மூன்று முறை சுடுதல் என அனைத்து முயற்சிகளும் எடுத்தப்பின்பும் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த முடியாததால், இறுதியில் வேறு வழியின்றி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும்  கூறப்பட்டுள்ளது.