சென்னை:

காவிரி பிரச்சினையில் மத்திய அரசுக்கு  அரசியல் ரீதியாகவும், அரசு ரீதியாகவும் நெருக்கடி கொடுத்தாகி விட்டது என்றும்,   காவிரி நீர்ப்பங்கீட்டு வரைவுத் திட்டம் தாக்கல் செய்ய மத்திய அரசு அவகாசம் கோருவதை ஏற்க முடியாது  என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

காவிரி  நதி நீர் பிரச்சினையில்  உச்சநீதி மன்றம் இறுதி தீர்ப்பு வழங்கிய பின்னரும் அதை செயல்படுத்தாமல், மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இன்றைய விசாரணையின்போது, ஏற்கனவே உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியபடி,  காவிரி நீர் பங்கீட்டு வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கேட்டு மத்திய அரசு வாதாடியது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக மின்துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் வலியுறுத்தப்பட்டதாக கூறினார். மேலும்,  மத்திய அரசு அவகாசம் கோருவதை ஏற்க முடியாது என்றும்,  அரசியல் காரணங்களைக் காட்டி  தமிழகத்தின் ஜீவாதார உரிமையை மறுக்கக் கூடாது என்றும் தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், கர்நாடகாவுக்கு உச்சநீதி மன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது என்றம்,  ஏப்ரல்-மே மாதத்துக்கான தண்ணீரை கர்நாடகா திறந்துவிடவில்லை என்றால்,  அம்மாநில தலைமைச் செயயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என கண்டித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

காவிரி பிரச்சினையில் தமிழக அரசின் வாதங்களை முழுமையாக உச்சநீதி மன்றத்தில் எடுத்துரைத்துள்ளதாக வும்,  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அரசியலமைப்பின் படி உயர்ந்த அமைப்பான மத்திய அரசு கட்டுப்பட்டாக வேண்டும்  என்று கூறிய அமைச்சர், அரசியல் ரீதியாகவும், அரசு ரீதியாகவும் மத்திய அரசுக்கு ஏற்கனவே நெருக்கடி கொடுத்தாகிவிட்டது என்றும் கூறினார்.